[ο] தனுஷ் நடிப்பில் இளையராஜாவின் வாழ்க்கையை விவரிக்கும் திரைப்படத்தின் வேலைகள் தீவிரமெடுக்கின்றன. தயாரிப்பு முன் பணிகள், படப்பிடிப்பு நடத்தப்படும் இடங்கள் ஆகியவை இயக்குநர் அருண் மாதேஸ்வரனால் முடிவு செய்யப்பட்டுவிட்டன. இப்போது ‘இட்லி கடை’ படத்தை இயக்கிவரும் தனுஷ், ஏற்கெனவே நடிக்க ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு, ‘இளையராஜா’ பட வேலைகளில் ஈடுபடுவார் என்கின்றனர்.
[ο] சூப்பர் நாயகனாக நிவின் பாலி நடித்துவரும் ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’, பல்வேறு கோணங்களில் பின்னப்பட்ட கதையாகும். ஆனந்த் எஸ்.ராஜ், நிதி ராஜ், அனீஸ் ராஜசேகரன் என மூன்று கதாசிரியர்கள் இணைந்து இந்தக் கதையை எழுதியுள்ளனர். இந்தப் படம் குறித்து இன்னொரு தகவலையும் சொல்கின்றனர். இந்தியாவின் முதல் ‘மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோ’ படம் இது என்கின்றனர்.
[ο] முரளி, வடிவேலு நடிப்புக் கூட்டணியில் வெளியான ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. இந்தப் பாகத்தில் கருணாஸ், கருணாகரன் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ‘சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ உட்பட பல படங்களைத் தயாரித்த செவன்த் சேனல் நாராயணன், இந்தப் படத்தின் மூலம் நடிகராகிறார். “ஒரு பேருந்தையே சொந்தமாக வாங்கி, படப்பிடிப்பில் பயன்படுத்துகிறோம்,’’ என்கிறார் கருணாஸ்.
[ο] மாதவன் இப்போது சென்னை வீட்டுக்கு எப்போதாவதுதான் வருகிறார். மும்பை வீட்டில் அவருடைய உறவினர்கள் வசிக்கிறார்கள். படப்பிடிப்பு இருந்தால் மட்டும் இந்தியாவை எட்டிப்பார்க்கிறார். அடுத்த சில ஆண்டுகளுக்கு மகனோடு அவர் துபாய் வீட்டில்தான் இருப்பாராம். காரணம், நீச்சல் வீரராக இருக்கும் அவரது மகனுக்குத் தேவையான பயிற்சிகள் அங்கே எளிதில் கிடைப்பதுதான்.
[ο] தன் பிறந்தநாளை ஒட்டியும், ‘மத கஜ ராஜா’ படத்தின் எதிர்பாராத வெற்றிக்கும் சேர்த்து நண்பர்களுக்கு ஒரு பெரிய விருந்து கொடுத்தார் இயக்குநர் சுந்தர்.சி. இதுபோன்ற விருந்துகள் பக்கமே வராத வடிவேலு முதற்கொண்டு முன்னணி நடிகர், நடிகைகள் இதில் கலந்துகொண்டார்கள். அதில் சிறப்பம்சம் என்னவென்றால் வடிவேலுவும் யோகிபாபுவும் தனியாக உட்கார்ந்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார்களாம். இப்படி ஒரு விசாரிப்பை இருவரிடமும் யாருமே எதிர்பார்க்கவில்லை. தனது குலதெய்வமான ஐயனாரின் மகிமை பற்றி வடிவேலு பேச, யோகிபாபு அதை அக்கறையோடு கேட்டுக்கொண்டாராம்.
[ο] ‘செம்பி’ படத்தை அடுத்து, ‘மாம்போ’ என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரபு சாலமன். ‘கும்கி’யில் யானையை நடிக்க வைத்தவர், ‘மாம்போ’வில் சிங்கத்தை வைத்து இயக்கி வருகிறார். “எந்தவித நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தாமல், வெளிநாட்டில் சிங்கத்தை நடிக்க வைத்துப் படமாக்கி இருக்கிறார்,” என்கிறார்கள். “நம் வாழ்க்கையை எவ்வளவு மண் சார்ந்து நம் படங்கள் பிரதிபலிக்கின்றனவோ, அவ்வளவுக்கு நம் படங்கள் உலக சினிமாவாக மாறும்,” என்கிறார் பிரபு சாலமன்.
[ο] ராஜீவ்மேனன் இயக்கிய ‘சர்வம் தாளமயம்’ படத்திற்குப் பின், பல வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார் நடிகர் வினீத். ‘ஜெய் பீம்’ லிஜோமோல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘காதல் என்பது பொதுவுடமை’ என்ற படத்தின் மூலம் தனது அடுத்த சுற்றைத் தொடங்கியிருக்கிறார் வினீத். “மீண்டும் அறிமுகம் ஆவது போல்தான் இந்தப் படம் அவருக்கு அமைந்திருக்கிறது,” என்கின்றனர் அவரது திரையுலக நண்பர்கள்.
[ο] வெற்றி மாறனின் ‘விடுதலை 2’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பில் மகிழ்ந்திருக்கிறார் மஞ்சு வாரியர். மலையாளத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘எம்புரான்’, அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இதற்கிடையே, இந்தியில் மாதவனுடன் ‘அம்ரிகி பண்டிட்’ என்ற படத்தையும் தமிழில் ஆர்யாவுடன் ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற படத்தையும் முடித்துக்கொடுத்துவிட்டார் மஞ்சு.
[ο] மன்னர் காலக் கதையான ‘யாத்திசை’ படத்தை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்தவர் தரணி ராசேந்திரன். இப்போது அடுத்த அதிரடிக்குத் தயாராகிவிட்டார். ‘யாத்திசை’யில் நடித்த சேயோன், ‘விடுதலை’ முதல் பாகத்தில் நடித்த பவானிஸ்ரீ ஆகியோரின் கூட்டணியுடன் ஒரு படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்குகிறது. ‘யாத்திசை’ போல இதிலும் வலுவான கதை இருக்கிறதாம்.
[ο] இந்தப் புத்தாண்டை தாய்லாந்தில், தேனிலவுப் பயணமாகவும் கொண்டாடித் திரும்பியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். விரைவில் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தப்போகிறாராம். முதற்கட்டமாக, தமிழில் ஏற்கெனவே அவர் நடித்து முடித்த ‘ரிவால்வர் ரீட்டா’வை ஏப்ரலில் திரைக்குக் கொண்டுவர ஒருபக்கம் திட்டமிட்டிருப்பதால் அதன் பணிகளில் ஈடுபடுகிறார் கீர்த்தி. தவிர, அவர் தன் திருமணத்திற்கு முன் நடித்துவந்த ‘கண்ணி வெடி’ படப்பிடிப்பும் மீண்டும் தொடங்க இருப்பதாகத் தகவல்.
[ο] சிம்புவின் 50வது படமாக தேசிங்கு பெரியசாமி இயக்கும் படம் உருவாகிறது. ஒரு நடிகரின் திரைப்பயணத்தில் 50 படங்கள் என்பது பெரும் சாதனை என்பதால் அதை ஒரு பிரம்மாண்டப் படமாகக் கொடுக்க விரும்பும் சிம்பு, தேசிங்கின் படத்தை அறிவித்துள்ளார். இதற்காக ‘ஆத்மன் சினி ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் சொந்தத் தயாரிப்பு நிறுவனமும் தொடங்கியிருக்கிறார். அதற்கு முன் குறுகிய கால படமாக, ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் படத்தில் நடித்துக் கொடுத்துவிட்டு தேசிங்கின் படத்திற்கு வருகிறார்.
[ο] திரையுலகில் 13வது ஆண்டைக் கொண்டாடுகிறார் துல்கர் சல்மான். ‘சீதா ராமம்’, ‘லக்கி பாஸ்கர்’ என நல்ல கதைகளாகத் தேர்வு செய்து, அசத்தி வருகிறார். அடுத்து ‘காந்தா’ என்ற பீரியட் படத்தில் நடித்து வருகிறார். ஓடிடியில் வெளியான ‘ஹண்ட் ஃபார் வீரப்பன்’ ஆவணத்தொடரை இயக்கிய செல்வமணி செல்வராஜ், ‘காந்தா’வை இயக்குகிறார். தெலுங்கில் ரவிதேஜாவின் ‘மிஸ்டர் பச்சன்’ படத்தின் நாயகி பாக்யஸ்ரீ இதில் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளதாகத் தகவல்.
[ο] “சூர்யாவின் ‘சூரரைப் போற்று’, சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ போன்ற பயோபிக் படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது தமிழ் சினிமாவிற்குத் தனி உத்வேகத்தை அளித்துள்ளது’’ என்கிறார் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன். மேலும், “தமிழில் இளையராஜாவின் பயோபிக், பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் சாதனை படைத்த மாரியப்பன், அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய ஜி.டி.நாயுடு ஆகியோரின் வாழ்க்கையை விவரிக்கும் படங்களை அடுத்தடுத்து கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இதை நல்ல முன்னேற்றம்,’’ என்கிறார் அவர்.
[ο] ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘மதராஸி’ படத்தின் தலைப்பும் குறுமுன்னோட்டக் காட்சித் தொகுப்பும் பெரும் வரவேற்பை அள்ளியதில் மகிழ்கிறார் முருகதாஸ். இப்போது சல்மான் கானை வைத்து அவர் இந்தியில் இயக்கிவரும் ‘சிக்கந்தர்’, ரமலான் பண்டிகையின்போது வெளியாகிறது. இதன் படத்தொகுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முருகதாஸ், இந்தப் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு ‘மதராஸி’யின் இறுதிக்காட்சியைப் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறாராம்.