தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2025ல் திரைகாணவுள்ள நட்சத்திரங்களின் படங்கள்

3 mins read
f9c53cb0-1f60-4313-90bc-9ec9ad3fea3b
விஜய்யின் கடைசிப் படம் ‘விஜய் 69’. ஹெச்.வினோத் இயக்குகிறார். வில்லனாக இந்தி நடிகர் பாபி தியோல் நடிக்கிறார்.   - படம்: சமூக ஊடகம்
multi-img1 of 4

2024ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாகின. இருப்பினும் ‘அமரன்’, ‘மகாராஜா’, ‘லப்பர்பந்து’ உள்ளிட்ட சில படங்களே மக்கள் மனதில் நிலைத்து நின்றன.

கடந்த ஆண்டைப் போல் இல்லாமல் 2025ஆம் ஆண்டில் பெரும் பொருட்செலவில் முன்னணி நடிகர்களின் பல படங்கள் வெளியாகின்றன. அது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாண்டு வெளியாகும் சில முன்னணி நடிகர்களின் படங்கள் இங்கே.

விஜய் 69

விஜய்யின் கடைசிப் படம் இது. ஹெச்.வினோத் இயக்குகிறார். வில்லனாக இந்தி நடிகர் பாபி தியோல் நடிக்கிறார்.

விடாமுயற்சி, குட் பேட் அக்லி

கடந்த ஆண்டு அஜித்குமார் நடித்து ஒரு படம் கூட வெளியாகாத நிலையில் இந்த ஆண்டு அவரின் இரண்டு படங்கள் வெளியாகின்றன. ‘விடா முயற்சி’யை மகிழ் திருமேனியும் ‘குட் பேட் அக்லி’யை ஆதிக் ரவிச்சந்திரனும் இயக்கியுள்ளனர்.

கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படம். சத்யராஜ், அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் என பலர் நடித்துள்ளனர்.

தக் லைஃப்

‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னமும் கமல்ஹாசனும் இணையும் படம். கமலின் மகனாக சிம்பு நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜூன் 5ல் வெளியாகும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

இந்தியன் 3

இயக்குநர் ஷங்கரின் ‘இந்தியன் 2’ ஏமாற்றத்தைத் தந்தது. இந்நிலையில் ‘இந்தியன் 3’ இவ்வாண்டு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

கேம் சேஞ்சர்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நாயகனாக நடித்துள்ள படம் கேம் சேஞ்சர். கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், சுனில், அஞ்சலி என பலர் நடித்துள்ளனர். ஜனவரி 10ஆம் தேதி படம் வெளியாகிறது.

வணங்கான்

பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘வணங்கான்’. அவர் திடீரென விலகியதால் அதில் அருண் விஜய் நடித்தார். ஜனவரி 10ஆம் தேதி படம் வெளியாகிறது.

ரெட்ரோ, சூர்யா 45

‘கங்குவா’ ஏமாற்றத்தைத் தந்தாலும் இந்த ஆண்டு சூர்யா நம்பிக்கையாக உள்ளார். கார்த்திக் சுப்புராஜின் ‘ரெட்ரோ’ அதிக நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது, சூர்யாவுக்கு. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 45’ வெளியாகவுள்ளது.

வீர தீர சூரன், சீயான் 63

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் நடிக்கும் படம் ‘வீர தீர சூரன்’. இதையடுத்து மடோன் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விக்ரம். ‘சீயான் 63’ என தற்காலிகத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படம், ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.

எஸ்கே 23

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் எஸ்கே 23. ருக்மணி வசந்த், வித்யூத் ஜாம்வல், பிஜுமேனன் என பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லட்சுமி மூவிஸ் தயாரிக்கிறது.

குபேரா, இட்லிகடை

தனுஷின் பான் இந்தியா படம், ‘குபேரா’. சேகர் கம்முலா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தனுஷ் இயக்கி நடிக்கும் அடுத்த படம் ‘இட்லி கடை’. இதில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே நாயகிகளாகவும் அருண் விஜய் வில்லனாகவும் நடிக்கின்றனர்.

சிம்பு

‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்கும் சிம்பு, அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது என்கிறார்கள்.

வா வாத்தியாரே, சர்தார் 2

நலன் குமரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியாரே’, மித்ரன் இயக்கத்தில் நடித்து வரும் ‘சர்தார் 2’ படங்கள் இந்த ஆண்டு வெளியாகலாம்.

டிரெய்ன், ஏஸ்

விஜய் சேதுபதி நடித்து கடந்த ஆண்டு வெளியான ‘மகாராஜா’ மாபெரும் வெற்றியைப்பெற்றது. அவர் நடிப்பில் இவ்வாண்டு வெளியாகும் ‘டிரெய்ன்’, ‘ஏஸ்’ படங்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

காதலிக்க நேரமில்லை, ஜீனி

ஜெயம் ரவி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ வித்தியாசமான காதல் கதையைக் கொண்ட படம் எனக் கூறப்படுகிறது.

ரவி நடிப்பில் மாபெரும் பொருட்செலவில் உருவாகும் படம் ‘ஜீனி’. இந்த இரண்டு படங்களும் ரவியின் திரைப் பயணத்திற்கு முக்கியமானதாக இருக்கும்.

குறிப்புச் சொற்கள்