அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்துப் பெயரெடுத்தவர் நடிகை ராதிகா ஆப்தே. சமூகம் சார்ந்த விவகாரங்கள் தொடர்பாகத் தயக்கமின்றித் தனது கருத்துகளை வெளிப்படுத்தக்கூடியவர்.
இந்நிலையில், தனது திரைப்பயணத்தில் எதிர்கொண்ட மிகவும் அதிர்ச்சிகரமான அனுபவம் ஒன்றைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் ராதிகா ஆப்தே.
“திரைப்படங்களில் நாயகனுடன் நெருக்கமான, சவாலான காட்சிகளில் நடிப்பது என்பது கதையின் தேவையைப் பொறுத்த விஷயம். ஆனால், அத்தகைய காட்சிகள் தனிப்பட்ட முறையில் இணையத்தளங்களில் தவறாகக் கசியவிடப்படும்போது, ஒரு பெண்ணின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறுகிறது,” என்கிறார் ராதிகா.
இவ்வாறு தான் நடித்த ஒரு படத்தில் இடம்பெற்ற நெருக்கமான காட்சி ஒன்று இணையத்தில் கசிந்த சம்பவத்தை அவர் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
அந்தத் தருணத்தில் ஏற்பட்ட பயத்தையும் மன உளைச்சலையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அந்தக் காட்சி கசிந்த சமயத்தில், என்னால் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் வெறுமனே சமூக ஊடகங்களோடு நின்றுவிடுவதில்லை.
“அது வெகுவிரைவாக நமது வீட்டின் கதவு வரை வந்துவிடும். யாராவது தவறான எண்ணத்தோடு நமது வீட்டு வாசலில் வந்து நிற்கக்கூட வாய்ப்பு இருக்கிறது,” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
“நான் அப்போது தனியாக வசித்து வந்தேன். என் வீட்டின் காவலாளி முதல் எனக்குத் தெரிந்த சிலர் வரை அந்தக் காணொளியைப் பலரும் பார்த்திருந்தனர். இது எனக்குப் பாதுகாப்பற்ற உணர்வைத் தந்தது,” என்று ராதிகா ஆப்தே மேலும் குறிப்பிட்டுள்ளார்.
