சென்னை: பழம்பெரும் நடிகர் ராஜேஷ் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75.
வியாழக்கிழமை (மே 29) காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனைக்கு விரைந்து கொண்டுசெல்லப்பட்டார். பிறகு அவர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜேஷின் மனைவி ஜோவேன் சில்வியா ஏற்கெனவே காலமாகிவிட்டார். அந்தத் தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். மகன் பெயர் தீபக், மகள் பெயர் திவ்யா.
ராஜேஷ், 1974ஆம் ஆண்டு கே.பாலசந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதி பிறந்த அவர், பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தார். திரைப்பட நடிகராவதற்காக அவர் தமிழ் ஆசிரியர் பணியிலிருந்து விலகினார்.
ராஜேஷ், 150க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கே.பாக்யராஜின் ‘அந்த 7 நாட்கள்’, கே.பாலசந்தரின் ‘அச்சமில்லை அச்சமில்லை’ உள்ளிட்ட பிரபலப் படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர் ராஜேஷ்.