புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் பி. ஜெயச்சந்திரன் காலமானார்

2 mins read
cf0364e7-e4ee-40de-95b7-f82e0b9eda69
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் 16,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் திரு ஜெயச்சந்திரன். - படம்: இந்திய ஊடகம்

திருச்சூர்: கடந்த 60 ஆண்டுகாலமாக ரசிகர்களைத் தமது காந்தக் குரலால் கட்டிப்போட்ட புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் பி. ஜெயச்சந்திரன் காலமானார். அவருக்கு வயது 80.

கேரள மாநிலத்தின் திருச்சூரில் உள்ள திருச்சூர் அமலா மருத்துவமனையில் வியாழக்கிழமையன்று (ஜனவரி 9) அவரது உயிர் பிரிந்தது. புற்றுநோய்க்காக அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்ததாக கேரள ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

காதல், ஏக்கம், பக்தி என, அனைத்துவகைப் பாடல்களையும் ஆன்மாவைத் தொடும் வகையில் உணர்ச்சி ததும்பப் பாடக்கூடிய அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் 16,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

சிறந்த திரைப்படப் பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது பெற்றவரான திரு ஜெயச்சந்திரன், தமிழக அரசின் கலைமாமணி விருது, நான்கு முறை தமிழக அரசின் சிறந்த திரைப்படப் பின்னணிப் பாடகர் விருது, ஐந்து முறை கேரள அரசின் சிறந்த திரைப்படப் பின்னணிப் பாடகர் விருது எனப் பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர்

கடந்த 1944ஆம் ஆண்டு கேரள மாநிலத்தின் எர்ணாகுளத்தில் பிறந்த திரு ஜெயச்சந்திரனுக்கு லலிதா என்ற மனைவியும், லட்சுமி என்ற மகளும், தீனநாதன் என்ற மகனும் உள்ளனர்.

தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் ஏராளமான பாடல்களைப் பாடி, தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தை இவர் தக்கவைத்திருந்தார்.

காலத்தால் அழியாத அவரது குரலுக்கு, ரசிகர்களைக் கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்று, நினைவலைகளை மீட்கும் வல்லமை உண்டு என்றால் அது மிகையாகாது.

குறிப்புச் சொற்கள்