பழம்பெரும் சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் வயது முதிர்வு காரணமாக வேலூரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவருக்கு வயது 92.
எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உட்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு சண்டைப் பயிற்சியாளராக ஜூடோ ரத்தினம் பணிபுரிந்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த 46 படங்களில் சண்டைப் பயிற்சி அளித்தவர் ஜூடோ ரத்தினம். மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் நடித்த 52 படங்களில் இவர் சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றியிருந்தார்.
1970 தொடங்கி 1992 வரை தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் ஏறத்தாழ 1,500 திரைப்படங்களுக்கு சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றியவர் ஜூடோ ரத்தினம்.
தமிழ் திரையுலகில் இன்று பிரபலமாக இருக்கும் முன்னணி சண்டைப் பயிற்சியாளர்கள் இவரிடம் உதவியாளர்களாக பணிபுரிந்தவர்கள்.
சுராஜ் இயக்கத்தில் சுந்தர்.சி நாயகனாக நடித்து 2006ல் வெளியான 'தலைநகரம்' படத்தில் ஜூடோ ரத்தினம் வில்லனாக நடித்திருந்தார்.
கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இவர் பெயர் இடம்பெற்றுள்ளது. 2019ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதை இவர் பெற்றார்.

