பயணங்கள் கற்றுத் தந்த பாடங்கள்: பாடகி தீ

பயணங்கள் கற்றுத் தந்த பாடங்கள்: பாடகி தீ

2 mins read
f9df4914-fdf4-42ed-bbb1-e7b944d05bb3
பாடகி தீ. - படம்: விகடன்
multi-img1 of 2

இளம் பாடகி தீ என்ற பெயரை உச்சரிக்கும்போதே இளையர்களிடம் ஒருவிதமான உற்சாகம் தோன்றுவதைக் காண முடிகிறது.

‘எஞ்சாயி எஞ்சாமி’, ‘காட்டுப் பயலே...’ பாடல்கள் மூலம் மனத்தை உருக வைத்தவர், இப்போது ‘வாரி வாரி’ பாடல் மூலம் பரவலாகப் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

“இது ஒரு தனியிசைப் பாடல். இத்தகைய பாடல்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. தரமான இசை, பாடல் வரிகள், பாடகர், இசைக் கலைஞர்கள் என எல்லாம் ஒருசேர அமையும்போது வெற்றியும் தன்னால் வந்துவிடும்.

“இப்போது வெளியாகியிருக்கும் எனது ‘வாரி வாரி’ பாடலும் இந்த உண்மையை மீண்டும் உணர்த்தி உள்ளது,” என்கிறார் தீ.

அண்மையில் இந்தப் பாடல் இலங்கையில் வெளியிடப்பட்டது. மிக விரைவில் சென்னையிலும் வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளாராம் தீ.

“கூடிய விரைவில் சென்னைக்கு வர வேண்டும், வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. எனினும் இலங்கையில் மேலும் சில நாள்கள் தங்கியிருப்பேன்,” என்கிறார் தீ.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பாதிப்பொழுது பயணத்தில்தான் கழிந்ததாம். சில காலம் லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சிட்னி எனத் தங்கியிருந்ததால் பொழுது கடந்துபோனதே தெரியவில்லை என அண்மை ஊடகப் பேட்டியில் பாடகி தீ குறிப்பிட்டுள்ளார்.

“விரைவில் சென்னையில் உள்ள ரசிகர்களைச் சந்திக்க விரும்புகிறேன். இந்த இரண்டு ஆண்டுகளில் என்னைப் பற்றிய சுயபரிசோதனையில் ஈடுபட்டேன். ஓர் எழுத்தாளராக எனக்கு சௌகரியமான சூழலைவிட்டு வெளியே வந்ததாகக் கருதுகிறேன். இதன் பலனாக நிறையக் கற்றுக்கொள்ள முடிந்தது.

“இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்ட பயணங்கள் மூலம் கிடைத்த அனுபவங்களும் சுவாரசியங்களும் எனக்கும் என் கலைக்கும் பயனுள்ளதாக இருக்கின்றன,” என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் தீ.

‘வாரி வாரி’ பாடலை இலங்கையில் வெளியிட இருந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நடிகர் சூர்யா இலங்கையில்தான் இருந்தாராம். பாடலைக் கேட்டுவிட்டு மிகவும் நன்றாக உள்ளது என்று மனதார வாழ்த்தினாராம்.

“இதை ஆகச் சிறந்த ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். சூர்யா மிகவும் அடக்கமானவர். தொழில் பக்தியும் ஒழுக்கமும் உள்ளவர். அவரது பாராட்டு உத்வேகத்தைக் கொடுக்கிறது.

“பல நாடுகளுக்குப் பயணப்பட்டதில் ஒரு விஷயத்தை உணர்ந்தேன். நம் இசையைக் கேட்பதற்கான ஒரு கதவு எப்போதும் திறந்தே இருக்கும். காரணம் நமது இசையின், வித்தியாசமான ஒலி அமைப்பு மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறது.

“நமது நாட்டுப்புறப் பாடலைக் கேட்கும்போது புது உற்சாகம் கிடைக்கிறது என்று வெளிநாட்டவர்கள் கூறுகின்றனர்.

“நாம் வெளிநாட்டவர்களுடைய இசையைக் கற்பதைவிட, நமது இசையை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கலாம். அதுதான் பெரிய வரவேற்பைத் தருகிறது. நமக்கும் அதுதான் பலம்,” என்று பாடகி தீ மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்