தான்ன் நகைச்சுவை நடிகரா அல்லது கதாநாயகனா என்பதை மக்களே முடிவெடுக்கட்டும் என ஏறுமுகத்தில் இருக்கும் நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
“மாமன்’ படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது. திரையரங்குகள் அனைத்தும் நல்ல வசூல் செய்துள்ளதாகக் கூறுகின்றனர். படத்திற்கு மாறுபட்ட கருத்துகள் இல்லை. ஒவ்வோர் ஆண்டும் குடும்பம் சார்ந்த படங்களை எடுக்க ஆசைப்படுகிறேன். அனைத்து குடும்பங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளதாகப் படம் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
“கதாநாயகனுக்கான நடிப்புடன் தொடர்ந்துப் வெற்றி படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் நகைச்சுவை நடிகனாக இருக்க வேண்டுமா, கதாநாயகனாக நடிக்க வேண்டுமா என்பதை மக்களே முடிவெடுப்பார்கள்.
“மக்கள் ஆதரவு இல்லாமல் எந்த ஒரு விஷயமும் நடக்காது. கதாநாயகனாக தற்போது நடிக்கும் வாய்ப்புக்கு இடையூறு இல்லாமல் முன்னணி நடிகர்களுடன் நகைச்சுவை வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்.
“படங்களைப் பல கோடி செலவு செய்து எடுக்கும் இயக்குநர், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் படம் எப்படி வரும், மக்கள் வரவேற்பு கொடுப்பார்களா என கடவுளை வேண்டிக்கொண்டு இருக்கும் நிலையில், தவறான முறையில் திருட்டுத்தனமாகப் படங்கள் வெளியிடுபவர்களுக்கு ஆதரவு கொடுக்காதீர்கள். அது பலரின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
“மாமன்’ படத்தின் முதல் பாதியில் அதிகமான நகைச்சுவை காட்சியும் இரண்டாம் பாதியில் அதிக உணர்வுபூர்வமான காட்சிகளும் உள்ளன. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் குடும்பத்தில் நடந்த சம்பவத்தோடு ஒப்பிட்டுப் பேசுவது ‘மாமன்’ படத்தினுடைய வெற்றியாக உள்ளது.
“எனது அடுத்த படம் சண்டை, உணர்வுபூர்வமான படமாக இருக்கும். நடிகர் சிவகார்த்திகேயனோடு மீண்டும் நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். அடுத்த படத்தில் இருவருக்கும் சரிசமமான கதாபாத்திரம் இருந்தால் இருவரும் இணைந்து நடிக்கலாம் என சிவகார்த்திகேயன் ஏற்கெனவே என்னிடம் கூறியுள்ளார். அப்படி ஒரு கதை அமைந்தால் கண்டிப்பாக நாங்கள் இருவரும் இணைந்து நடிப்போம்.
“நகைச்சுவை நடிகராக நடிப்பதைவிட கதாநாயகனாக நடிக்கும்போது கூடுதல் பொறுப்பு இருப்பதாகவே உணர்கிறேன். என்னுடைய அன்பு தம்பிகளே சினிமாவைக் கொண்டாடுங்கள். ஆனால், முதலில் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்,’’ என்று சூரி அறிவுறுத்தியிருப்பது பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.