கடந்த எட்டு ஆண்டுகளில், அனுஷ்கா மூன்று படங்களில்தான் நடித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, அவர் தனி நாயகியாக நடித்துள்ள ‘காட்டி’ படம் வசூல் ரீதியில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், படத்தின் விளம்பர நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. ஆனால், அனுஷ்காவை மட்டும் நிகழ்ச்சியில் காணவில்லை.
இதுகுறித்து ஊடகங்களில் பலவிதமான தகவல்கள் பரவியதை அடுத்து, படத்தின் இயக்குநர் கிரிஷ் விளக்கம் அளித்தார்.
“இப்படத்தின் கதாநாயகி அனுஷ்கா என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதும் வராமல் இருப்பதும் அவரது விருப்பத்தைப் பொறுத்தது. இதில் மற்றவர்கள் விவாதிக்க ஒன்றும் இல்லை,” என்று கூறி, இவ்விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கிரிஷ்.
இந்நிலையில், ‘காட்டி’ படத்தில், வன்முறைக் காட்சிகள் அதிகம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், அனுஷ்காவின் சிறு வயது தோற்றத்தைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஏஐ) மூலம் உருவாக்கியுள்ளனர்.
இது தொடர்பான காணொளியைத் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அனுஷ்கா.
மேலும், “என் முகத்தில் மீண்டும் மீண்டும் புன்னகையை வரவழைக்க நீங்கள் தவறுவதே இல்லை. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. சின்ன ஷீலாவதியின் அழகான காணொளிப் பதிப்பிற்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘காட்டி’ படத்தில் ஷீலாவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனுஷ்கா.