‘குயிலி’ படத்தில் நாயகியாக நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் குணச்சித்திர நாயகியாக லிஸி ஆண்டனி.
இதுபற்றி அவர் கூறுகையில், “சுய விருப்பம், கடின உழைப்பு, விடாமுயற்சி, பொறுமை ஆகிய நான்கு விஷயங்கள்மீது நான் அதிக நம்பிக்கை வைத்திருப்பவள். இதைத்தான் நான் என் வாழ்க்கையில் தற்போது வரை கடைப்பிடித்து வருகிறேன். இந்த விஷயங்களைத் தயாரிப்பாளர் அருண் குமாரிடமும் நான் பார்த்தேன்.
“இந்தப் படத்திற்கான அழைப்பு அவரிடம் இருந்துதான் எனக்கு முதலில் வந்தது. அவரே இப்படத்தின் கதையை என்னிடம் விவரித்தார். என் வாழ்க்கையில் முதன்முதலாக தயாரிப்பாளர் ஒருவர் கதையை அழகாக சொன்னது என்றால் அது இவர்தான்.
“அந்த அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது. இந்தத் திரைப்படம் பேசும் விஷயமும் எனக்கு பிடித்திருந்தது. இந்தப் படத்திற்கு ‘குயிலி’ என்றுதான் தலைப்பு இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன். உடனே அவரும் சரி என்று ஒப்புக் கொண்டார். இந்தப் படம் வெற்றி பெறும் நம்பிக்கை இருக்கிறது,” என்றார் குயிலியில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் லிஸி ஆண்டனி.
‘தூங்கா நகரம்’ படத்தில் அறிமுகமான இவர் தங்கமீன்கள், தரமணி, பரியேறும் பெருமாள், நாடோடிகள் 2, மஹாராஜா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். பேரன்பு படத்தில் மம்முட்டியின் மனைவியாக நடித்திருந்தார்.