அஜித்தை வைத்து அதிரடி சண்டைகள் நிறைந்த ‘ஆக்ஷன்’ படத்தை இயக்க விரும்புவதாகக் கூறியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
கார் பந்தயங்களில் பங்கேற்பதில் முனைப்பாக இருப்பதால் அஜித்துடன் இணைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“அஜித்தை வைத்து படம் இயக்குவதில் ஆர்வமாக உள்ளேன். இதற்கான பேச்சுவார்த்தை ஏற்கெனவே நடைபெற்றது. ஆனால், அந்த முயற்சி தள்ளிப்போகிறது.
“எனது பாணியில் ஓர் அதிரடியான கதையில் அஜித்தின் ‘அக்ஷன்’ முகத்தைக் காண்பிக்கும் ஆசை உள்ளது. தற்போது நான் ஒப்பந்தமாகியுள்ள படங்களை இயக்கி முடிந்ததும், அஜித்தைச் சந்தித்து கால்ஷீட் வாங்குவேன். அப்போது அவருக்காக நான் உருவாக்கி வைத்துள்ள கதையை அவரது நடிப்பில் இயக்குவேன்,” என்று லோகேஷ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ‘கூலி’ படத்தில் சில மாற்றங்களைச் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
“எனது முந்தைய படங்களில் வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றதுபோல், ‘கூலி’யிலும் சில காட்சிகள் உண்டு. எனினும், ரஜினி ரசிகர்களை மனத்தில் கொண்டு அந்தக் காட்சிகளில் சில மாற்றங்களைச் செய்து வித்தியாசமாகப் படமாக்கியுள்ளேன். ‘கூலி’ படம் ரஜினி ரசிகர்களை நூறு விழுக்காடு திருப்திப்படுத்தும் என நம்புகிறேன்,” என்றும் லோகேஷ் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

