கோவாவில் பிறந்த நடிகை லைலா, 1996ஆம் ஆண்டு இந்தியில் வெளியான துஷ்மன் துனியாக்கா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்த இவர் 1999ஆம் ஆண்டு கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு வந்தார். அதே ஆண்டு தமிழில் வெளியான ரோஜாவனம், முதல்வன் உள்ளிட்ட படத்திலும் இவர் நடித்திருந்தார். பிரசாந்த்துடன் பார்த்தேன் ரசித்தேன், அஜித்தின் தீனா, விக்ரமின் தில், சூர்யாவுடன் நந்தா, உன்னை நினைத்து, மௌனம் பேசியதே, பிதாமகன் உள்ளிட்ட பல படங்களில் லைலா நடித்துள்ளார். பிதாமகன் படத்தில் அவர் சொல்லும் ‘லூசாப்பா நீ’ வசனம் நிறையப் பெண் ரசிகைகளை இவருக்குப் பெற்றுத்தந்தது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள லைலா அந்தப் படம் பற்றியும் விஜய்யுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்தும் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
கடந்த 2006ஆம் ஆண்டு ஈரானியத் தொழிலதிபர் மெஹ்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை லைலா. அதற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார்.
மும்பையில் குடியேறிய லைலாவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது 43 வயதை எட்டியுள்ள நடிகை லைலா பல ஆண்டுகள் கழித்து கார்த்தியின் சர்தார் படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்குள் நுழைந்தார்.
தற்போது விஜய்யுடன் இணைந்து கோட் படத்தில் நடித்துள்ளார்.
உன்னை நினைத்து படத்தில் முதலில் விஜய் தான் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். அவருடன் இணைந்து ஒரு பாடலுக்கும் நடனம் ஆடினார் நடிகை லைலா. ஆனால், அதன் பின்னர் அந்தப் படத்திலிருந்து விஜய் விலகிய நிலையில் சூர்யா அந்த படத்தில் நடித்தார். விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட லைலா பல ஆண்டுகள் கழித்து தனது கனவு கோட் படத்தின் மூலம் நிறைவேறி விட்டதாகக் கூறியுள்ளார். உன்னை நினைத்து படத்தில் சினேகா தான் கதாநாயகி. லைலா அந்தப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். அதேபோல தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படத்தில் சினேகா தான் விஜய்க்கு ஜோடி. லைலா பிரசாந்த்துக்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பது படம் வெளியானால் தான் தெரியவரும். அண்மையில், திருநெல்வேலிக்குப் படப்பிடிப்புக்காக லைலா சென்றிருந்தபோது ரசிகர்கள் அவரை ‘லைலா லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைத்ததாக லைலா நேர்காணல் ஒன்றில் கூறினார். ரசிகர்கள் தன்னை இவ்வாறு அழைத்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என லைலா தெரிவித்தார்.
“நான் திரையுலகில் அறிமுகமான காலத்தில் சமூக ஊடகம் எனப் பெரிதாக எதுவும் இல்லை. ரசிகர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எங்களுக்குப் பெரிதாக அமையவில்லை,” எனக் கூறியுள்ளார் லைலா.
கோட் திரைப்படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் இத்தனை நடிகர்களுடன் நடிப்பது தனக்குக் கிடைத்த பாக்கியம் என்றும் இவர் தெரிவித்துள்ளார்.