நல்ல படத்தைத் தேடுகிறேன்: ஓய்வு குறித்து கமல்

1 mins read
ae485158-fee9-43aa-b1b6-8ec5d6299d62
கேரளாவில் டிசம்பர் 1ஆம் தேதி மனோரமா ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கமல்ஹாசன், மஞ்சு வாரியர். - படம்: மனோரமா

கேரளாவில் மனோரமா ஊடகம் நடத்திய ‘ஹார்ட்டஸ் 2025’ நிகழ்ச்சி டிசம்பர் ஒன்றாம் தேதி நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் மோகன்லால், மஞ்சு வாரியர், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது, கமலிடம் ஓய்வு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் நெறியாளர் கமலிடம், “‘தக் லைஃப்’ போன்ற உங்களின் புதிய படங்களை ‘கமலின் மறுபிரவேசம்’ என அழைப்பது சரியா? இதுபோன்ற படங்களுக்கான உற்சாகம் பழைய தலைமுறையினருக்கு மட்டுமே இருக்குமா? இன்றைய இளைஞர்கள் புதிய கூட்டணிகளைத்தான் விரும்புகிறார்களா?” எனக் கேட்டார்.

அதற்கு, “புதிய கூட்டணியில் படங்கள் உருவாகுவது மிகவும் முக்கியம். பழையவைக்கு ஓய்வு கொடுப்பதை ரசிகர்களே கவனித்துக் கொள்வார்கள். என்னிடம் நடிப்பிலிருந்து ஓய்வு பெறுவீர்களா என இதுவரை யாரும் கேட்டதில்லை.

“ஆனால் மோசமான படங்களை எடுக்கும்போது எனக்கு ஓய்வு பெற வேண்டும் எனத் தோன்றும். அப்போது என்னுடைய நண்பர்கள், ‘இப்போது வேண்டாமே, நல்ல படம் ஒன்றில் நடித்துவிட்டு ஓய்வு எடுத்துக்கொள்’ எனச் சொல்வார்கள்

“இன்னும் அந்த நல்ல படத்தை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்,” எனக் கமல் பதிலளித்தார்.

இதற்கிடையே, சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் இயக்கத்தில் உருவாகும் படத்திற்காகத் தயாராகி வருகிறார் கமல்.

அப்படத்திற்காக மலையாளத் திரையுலகிலிருந்து தொழில்நுட்பக் குழுவினரை அழைத்து வந்திருக்கின்றனர்.

கூடிய விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்