பெரிய நடிகர்களின் படம் என்றால் ரசிகர்கள் முதல் காட்சிக்கு முண்டியடிப்பார்கள் என்றும் தரமான, நல்ல படங்களைக் காண திரையரங்குக்கு வருவதில்லை என்றும் இயக்குநர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
தற்போது நடிகராக தமிழிலும் தெலுங்கிலும் அசத்தி வரும் சமுத்திரக்கனி அண்மைய பேட்டியில் தனது சினிமா அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
“நான் எடுத்த ‘அப்பா’, ‘சாட்டை’ போன்ற திரைப்படங்கள் உடனடியாக ரசிகர்களிடம் சென்று சேர்ந்துவிடாது. இந்த மாதிரியான படங்களை தாமதமாக தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு ‘நல்லாதான் இருக்கு’ என சொல்லிவிட்டு போய்விடுவார்கள்.
“இதுபோன்ற படங்களுக்கு பின்னால் இருக்கும் உழைப்பு மிகப்பெரியது. கிட்டத்தட்ட நான் ஏழு ஆண்டுகள் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்துத்தான் ‘அப்பா’ படத்தை எடுத்தேன். ஆனால், படம் எனக்கு நஷ்டத்தைக் கொடுத்தது என்பதுதான் உண்மை,” என்று சமுத்திரக்கனி கூறியுள்ளார்.