ஶ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்து வருகிறார்.
பாலிவுட் படங்களைத் தொடர்ந்து தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த ‘தேவரா’ படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இவர் அணியும் உடைகள், ஸ்டைல் என எதுவாக இருந்தாலும் அடிக்கடி பிரபலமாகிவிடுகிறது.
ஒரு காலத்தில் இந்தியத் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த ஸ்ரீதேவியின் மகளாக இருந்தாலும் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் ஜான்வி.
தற்போது அவர் மீது ரசிகர்களின் பார்வை அதிகமாகி வருகிறது. காரணம், காதல் வாழ்க்கை.
முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேயின் பேரன் ஷிகர் பஹாரியாவை ஜான்வி பல ஆண்டுகளாகக் காதலித்து வருகிறார்.
தமது காதல் குறித்தும் காதலன் குறித்தும் அவர் வெளிப்படையாகப் பேசியதில்லை என்றாலும் காதலன் பெயருடன் கூடிய நெக்லஸை ஜான்வி அணிந்திருந்த புகைப்படம் இணையத்தில் பரவி இருவரின் காதலை உறுதிப்படுத்தியது.
விரைவில் ஜான்வி – ஷிகர் ஜோடி திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
ஆயினும் அதுகுறித்து இருவீட்டாரிடம் இருந்தும் எந்தவோர் அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
ஜான்வி கபூர் நாயகியாக நடித்த ‘பரம சுந்தரி’ பாலிவுட் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அடுத்து அவர் நடித்துள்ள ‘சன்னி சன்ஸ்காரி கி துல்சி குமாரி’ படம் விரைவில் வெளியாக உள்ளது. அந்தப் படம் திருமண வாழ்க்கை தொடர்பானது.
படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடும் விழாவில் ஜான்வி கபூரின் திருமணம் குறித்து ஊடகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், “இப்போது எனது திட்டமெல்லாம் படங்களைப் பற்றியே உள்ளது. திருமணத்திற்கு திட்டமிட இன்னும் நிறைய காலம் இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் தமது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில சுவாரசியமான தகவல்களை ஜான்வி பகிர்ந்திருந்தார்.
திருமணத்திற்குப் பிறகு மூன்று குழந்தைகளைப் பெற்று, வளர்க்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் அதற்குக் காரணம் மூன்று என்பது தமது அதிர்ஷ்ட எண் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.