கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட அற்புதங்கள்தான் காதல்: ராம்குமார்

கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட அற்புதங்கள்தான் காதல்: ராம்குமார்

3 mins read
d3b68e1a-ee4d-4216-92d6-e67fca65e5ed
‘இரண்டு வானம்’ படத்தில் மமிதா பைஜு, விஷ்ணு விஷால். - படம்: விகடன்

சங்க இலக்கியம் முதல் தற்போதைய இன்ஸ்டகிராம் காலம் வரை இன்னும் சொல்லித்தீராத ஒரே விஷயம் காதல்தான் என்கிறார் இயக்குநர் ராம்குமார். அவர் ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ ஆகிய படங்களை இயக்கியவர்.

தற்போது அவரது இயக்கத்தில், விஷ்ணு விஷால், மமிதா பைஜு ஆகியோரின் நடிப்பில் ‘இரண்டு வானம்’ என்ற படம் உருவாகியுள்ளது.

ஒவ்வொரு படத்துக்குமான திரைக்கதையை உருவாக்கத் தமக்கு ஓராண்டாவது தேவைப்படும் என்பவர், அது நிச்சயம் வெற்றிபெறும் என்ற மனநிறைவு ஏற்பட்ட பிறகே, படமாக்கும் முயற்சியில் கால்பதிப்பதாகக் கூறுகிறார்.

“ஒரு படத்தை இயக்குவதற்குமுன் அதற்கான செலவு, தயாரிப்பாளர், நடிகர், நடிகைகளின் தேர்வு, அவர்களின் ‘கால்ஷீட்’, படப்பிடிப்புத் தளங்களின் தேர்வு எனப் பல விஷயங்கள் உள்ளன. அனைத்தையும் சரியாகச் செய்தால்தான் எந்தச் சிக்கலும் இருக்காது, நாம் எதிர்பார்க்கும் வெற்றி கிட்டும்.

“அதற்காகத்தான் நான் நிறைய அவகாசம் எடுத்துக்கொண்டு மிகவும் நிதானமாகச் செயல்படுகிறேன். இதன் காரணமாகத்தான் `முண்டாசுப்பட்டி’, `ராட்சசன்’ படங்களுக்குப் பிறகு பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது,” என விளக்கம் அளித்தார் ராம்குமார்.

இந்த உலகம் அன்பினால் நிரம்பியது என்று சொல்லும் அவர், காதல் என்பது வெறும் பேசும் விஷயம் அல்ல என்றும் அது உணரக்கூடியது என்றும் கூறினார்.

“காதல் குறித்துப் பலதரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. சுகம், சித்திரவதை, சொர்க்கம் என ஒவ்வொருவருக்கும் அது பற்றித் தனிப்பட்ட கருத்துகள் உள்ளன.

“காதல் என்பது ஓர் அனுபவம்தான். காதல், அன்பு, நட்பு என மூன்றையும் சேர்த்துக் குழப்பிக்கொண்டவர்கள் ஏராளம். இதுபோன்ற மாய வடிவத்தைத்தான் ‘இரண்டு வானம்’ படத்தில் விளக்கியிருக்கிறேன்.

“கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட அற்புதங்களும் அபத்தங்களும் கொண்டதே காதல். எனது அடுத்த படைப்பு காதலின் சில பக்கங்களைப் பற்றிப் பேச வருகிறது,” என்கிறார் ராம்குமார்.

தனது படங்களில் எப்போதுமே விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிப்பது குறித்து பலரும் கேட்டிருப்பதாகச் சொன்ன அவர், அதற்கான காரணத்தையும் அண்மைய பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார்.

“என் படங்களுக்குப் பக்கத்து வீட்டுப் பையன் எனக் கூறும் வகையில், எதார்த்தமான நடிப்பை வழங்கக்கூடியவர்களே தேவைப்பட்டார்கள். அதற்கு, விஷ்ணு விஷால்தான் பொருத்தமாக இருப்பார்.

“அதைத் தவிர, எங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. இந்தக் கதையை அரை மணி நேரத்தில் சொல்லி முடித்துவிடவேண்டும் எனத் திட்டமிட்டுத்தான் அவரைச் சந்திக்கச் சென்றேன். ஆனால், அவரது ஆர்வத்தைக் கண்டு நான்கு மணி நேரம் கதையை விவரித்தேன்.

“விஷ்ணுவுடன் பணியாற்றுவது எளிதாக இருக்கும். ஒவ்வொரு காட்சியையும் அவர் மெருகேற்றி நடிப்பார். அவர் இந்தக் படத்திலும் நடித்ததில் எனக்குப் பெரும் நிம்மதி,” என்கிறார் ராம்குமார்.

கதாநாயகி மமிதா பைஜுவை ‘பிரேமலு’ படம் வெளியாகும் முன்பே இப்படத்துக்காக ஒப்பந்தம் செய்துவிட்டதாகச் சொன்னார் அவர்.

“மமிதா இயல்பான நடிப்பை வழங்கக்கூடியவர். ஒரு காட்சியை விளக்கும்போது, அதைச் சரியாக உள்வாங்கி, பிரமாதமாக நடிப்பார். மமிதாவும் விஷ்ணுவும் இணைந்து நடித்த காதல் காட்சிகள் இயல்பாக வந்துள்ளன.

“முனீஸ்காந்த், காயத்ரி ஆகியோரும் படத்தில் உள்ளனர். நிறைய சிறுவர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையில் ஐந்துப் பாடல்கள் காதுகளுக்கு விருந்து படைக்கும். தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனின் முழு ஒத்துழைப்பு எங்களுக்குப் பலம்சேர்த்தது,” என்றார் ராம்குமார்.

குறிப்புச் சொற்கள்