ஊர் மக்களின் அன்பு நெகிழ வைத்தது: ஜீவா

ஊர் மக்களின் அன்பு நெகிழ வைத்தது: ஜீவா

2 mins read
f3310a2d-5934-499e-93cf-32c45477e162
‘தலைவர் தம்பி தலைமையில்’ வெற்றி விழாவில் பேசிய ஜீவா. - படம்: விகடன்
multi-img1 of 2
Google News Preferred Icon

‘தலைவர் தம்பி தலைமையில்’ தனது திரைப்பயணத்தில் மிகப் பெரிய வெற்றியைச் சாத்தியமாக்கி உள்ளதாக நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக குறைந்த செலவில் தயாரிக்கப்படும் தமிழ்ப் படங்கள் பெரிய வெற்றிகளைப் பெற்று வருகின்றன.

அந்தப் பட்டியலில் இந்தப் படமும் இணைந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்டு பேசிய ஜீவா, படத்தின் உண்மையான கதாநாயகன் அதன் இயக்குநர் நிதிஷ் சகாதேவன்தான் என்றார்.

ஒவ்வொரு நடிகரிடம் இருந்தும் திறமையை வெளிக்கொண்டுவந்து காட்சிகளை அருமையாக அவர் மெருகேற்றியதாகவும் ஒட்டுமொத்தப் படக்குழுவுக்கும் இந்த வெற்றியில் பங்கு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

படப்பிடிப்புக்காக தமிழகத்தின் குமுளி பகுதி அருகே இப்படக்குழுவினர் நான்கு மாதங்கள் தங்கியிருந்தனராம். அங்கு கிடைத்த அன்பையும் விருந்தோம்பலையும் மறக்கவே இயலாது என்றார் ஜீவா.

“நாங்கள் தங்கியிருந்த நாள்களில் அந்த ஊர் மக்கள் அன்பைக் கொட்டினார்கள். இந்தப் படம் வெற்றிபெற கிடா வெட்டி சாமி கும்பிட்டனர். பிறகு இமாலய வெற்றி கிட்டும் என்றும் வாழ்த்தினர்,” என்றார் ஜீவா.

படப்பிடிப்பு முடிந்து கிளம்பும்போது ஊர் மக்கள் கண்கலங்கியபடி வழியனுப்பியது இன்னும் தன் கண்களிலேயே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த வெற்றிக்கு அந்த மக்களின் அன்பும் முக்கியமான காரணம் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

“என் தந்தை ஆர்பி சௌத்திரி 99 படங்களை தயாரித்துள்ளார். ஆனால், இதுவரை யாருமே அவருக்குப் பாராட்டு விழா நடத்தியதில்லை. ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தாமாக முன்வந்து என் தந்தைக்கு பெரிய பாராட்டு விழா நடத்தினார். அதை என் வாழ்வின் பெரிய சாதனையாகக் கருதுகிறேன். அப்பாவின் ஆசிர்வாதமே இந்த வெற்றிக்குக் காரணம்,” என்று குறிப்பிட்ட ஜீவா, நடிகர் விடிவி கணேஷ்தான் இப்படத்தைத் தனக்கு சிபாரிசு செய்ததாகவும் குறிப்பிட்டார்.

“இருவருமாக சேர்ந்துதான் தயாரிப்பாளரை பார்க்கச் சென்றோம். கதை பிடித்திருப்பதாக கூறிய உடனேயே முன்பணமாக ஒரு தொகையைக் கொடுத்து எப்போது வேண்டுமானாலும் இந்தப் படத்தில் நடித்து கொடுங்கள் என்றார் தயாரிப்பாளர். அந்த நம்பிக்கைதான் இன்று வெற்றியாக மாறியுள்ளது. அந்தத் தருணங்கள் இனிமையான நினைவுகளாக மாறியுள்ளன,” என்றார் ஜீவா.

இந்த வெற்றி விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் இளவரசு, முன்பு ஆர்பி சௌத்ரியிடம் கதை சொல்லப் போனால், யார் கதாநாயகன் எனக் கேட்பார். ஜீவாதான் கதாநாயகன் என்றால், அவருடைய படம் ஓடாது என்று விளையாட்டாகச் சொல்லுவார். அப்படிப்பட்ட ஜீவா, தயாரிப்பாளருக்கு சுமைதராத கதாநாயகனாக இன்று வளர்ந்துள்ளார். ஒரு சக நடிகனாக இந்த வெற்றியை நான் அதிகம் ரசிக்கிறேன்,” என்றார் இளவரசு.

குறிப்புச் சொற்கள்