சசிகுமார், சிம்ரன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்கு தொடக்கத்திலேயே நல்ல வரவேற்பும் விமர்சனமும் கிடைத்து வருகிறது.
இந்நிலையில், சசிகுமாருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது தனது அதிர்ஷ்டம் எனக் கூறியுள்ளார் சிம்ரன்.
நல்ல குடும்பக் கதையாக இருந்ததால்தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் நடிக்க தாம் உடனடியாக சம்மதித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். “அதுமட்டுமல்ல, சசிகுமாருடன் இணைந்து நடிக்கப் போவதாக இயக்குநர் கூறியதும் நான் இந்த வாய்ப்பை ஏற்க இன்னொரு காரணம்.
“மிகப்பெரிய இயக்குநர், திறமையான நடிகர் சசிகுமார். அவருடன் இணைந்து நடிப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். சினிமாவில் ஜூனியர், சீனியர் என்ற பேதம் இருக்கக் கூடாது. திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் தரவேண்டும்,” என்கிறார் சிம்ரன்.
இவர் பாராட்டியதைப் போல் படத்திற்குப் படம் சமூக அக்கறையுடன் கூடிய கதைகளாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார் சசிகுமார்.
அடுத்து, இயக்குநர்கள் சசி, ராஜுமுருகன், தரணி ராசேந்திரன், ‘சலீம்’ நிர்மல் குமார் ஆகியோரின் படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.
சசிகுமாரைப் பார்க்கும்போது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக ராஜு முருகனும் பாராட்டியுள்ளார்.
“வெற்றியோ, தோல்வியோ சசிகுமாருக்கென்று மக்களிடம் ஒரு மரியாதை இருந்துகொண்டே இருக்கும். அண்மைக்காலமாக அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள், தரத்தின் அடுத்த தளத்தில் இருக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
“அந்த அளவுக்கு மிக முக்கியமான படங்களில் அவர் நடித்து வருகிறார்,” என்று ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது குறிப்பிட்டார் ராஜு முருகன்.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை அடுத்து ராஜுமுருகன் இயக்கியுள்ள ‘மை லார்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார்.
இதில் அவரது ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். இவர் சில கன்னடப் படங்களில் நடித்துள்ளாராம்.
படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தொழில்நுட்பப் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்தப் படம் சசிகுமாரின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

