பூட்டான் நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ஆடம்பரக் கார்களை வாங்கிய விவகாரம் தொடர்பில், பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மானிடம் மீண்டும் விசாரணை நடத்த சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
வெளிநாட்டு கார்கள் கடத்தப்படுவதைத் தடுக்க சுங்கத்துறை நடத்திய அதிரடி சோதனையில், துல்கர் சல்மான் வாங்கிய நான்கு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக இடைத்தரகர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொச்சி அலுவலகத்தில் நடந்த 7 மணி நேர விசாரணையில், “நான் சட்டப்படியே கார்களை வாங்கினேன், அவை பூட்டானில் இருந்து கடத்தி வரப்பட்டவை என்பது எனக்குத் தெரியாது,” என துல்கர் சல்மான் விளக்கமளித்தார்.
இந்த விளக்கத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. துல்கர் சல்மான் பெயரில் மேலும் சில சொகுசு கார்கள் இருப்பதாகச் சுங்கத்துறைக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. அந்த கார்கள் தற்போது எங்கு உள்ளன என்பதைக் கண்டறிய சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சுங்கத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
துல்கர் சல்மான் வசம் உள்ள பிற கார்களின் ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு, அவரிடம் மீண்டும் அடுத்தகட்ட விசாரணையை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இச்சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

