ஆர்.அரவிந்த ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விடியும் காத்திரு’.
படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரபல குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், அம்ஜதா செரீன், கோபி அயோத்தி, ராகேஷ், பேபி ஸ்ரீஜிதா ஆகியோர் நடித்துள்ளனர். பிரண்ட்ஸ் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.ரவிச்சந்திரன் தயாரிக்க அயோத்தி, வளர்மதி ஆகியோரும் படத்தைத் தயாரித்துள்ளனர்.
சத்யா இசை அமைத்துள்ளார். தாமோதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கதைக்களம்
படம் குறித்து இயக்குநர் அரவிந்தராஜன், “இந்தப் படத்தில் 58 வயதான காவல்துறை அதிகாரியான எம்.எஸ்.பாஸ்கர் இரண்டு ஆண்டுகளில் ஓய்வுபெறவிருக்கும் நேரத்தில் ஒரு வழக்கை விசாரணை செய்கிறார். ஒரு வீட்டில் மர்மமான முறையில் கொலை நடந்துள்ளது. வீட்டில் இருக்கும் உடலை அப்புறப்படுத்த முடியவில்லை. அதனால் அந்த வீட்டில் இரவு முழுவதும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
“அடுத்த நாள் காலை வீட்டைவிட்டு வெளியில் வந்தார்களா? அந்த வீட்டில் சந்தித்த சவால்கள் என்ன என்பதுதான் படத்தின் கதை. எம்.எஸ்.பாஸ்கர் கதாநாயகன் பாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்ததுடன் படத்தில் சண்டையும் போட்டுள்ளார். நல்ல படம் பார்த்த உணர்வு பார்வையாளர்களுக்கு வரும் வகையில் படத்தை உருவாக்கியுள்ளோம்.
“வயது பிரச்சினை கிடையாது. படத்தில் கதையின் நாயகனாக எப்படி பயன்படுத்த முடியுமோ அப்படி எம்.எஸ்.பாஸ்கரைப் பயன்படுத்தியிருக்கிறோம். கற்பனைக் கதைதான். படத்தின் கதையை எழுதி முடித்ததும் இந்த கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் அல்லது எம்.எஸ்.பாஸ்கரை நடிக்க வைக்கவேண்டும் என நினைத்தோம்.
“சென்னையில்தான் படத்தின் கதை அமைந்துள்ளது. எல்லாவற்றுக்கும் சல்யூட் அடித்து கொண்டிருக்கிற காவல்துறை கடைசியில் எம்.எஸ்.பாஸ்கருக்கு சல்யூட் அடிப்பதுபோன்ற சூழ்நிலை மாறும். ஒரே இரவில் இடம்பெறும் கதைதான்.
“படத்தில் மொத்தம் ஏழு கதாபாத்திரங்கள். அவற்றில் மூன்று பாத்திரங்கள் சடலங்கள். 48 நாள்கள் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். வருகிற 23ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது,” என்று விவரித்துள்ளார்.
பன்முக நடிகர்
அந்தக் காலத்தில் சின்னத் திரையில் பல பாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த எம்.எஸ்.பாஸ்கர், பிறகு திரைப்படங்களில் பலவகையான கதாபாத்திரங்களில் அசத்தியிருக்கிறார். சில படங்களில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த இவர் மற்ற ‘எட்டு தோட்டாக்கள்’ போன்ற படங்களில் சோகக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்தவர்.
