மக்களை வெகுவாகக் கவர்ந்த ‘கர்ணன்’ படத்திற்கு இயக்குநர் மாரி செல்வராஜும் நடிகர் தனுஷும் மீண்டும் கைகோக்கின்றனர்.
தனுஷின் 56வது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளில் கடந்த சில மாதங்களாகத் தீவிரமாக இறங்கியுள்ளார்.
‘தனுஷ் 56’ திரைப்படத்தைக் குறித்து மாரி செல்வராஜ் அண்மையில் நேர்காணல் அளித்தார். அதில், தனுஷ் அடுத்து நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதை அவர் உறுதிசெய்தார்.
“செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கும். கற்பனை, வரலாறு, அரசியல் ஆகியவை கலந்த படமாக அது இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்,” என்றார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
தமது இயக்குநர் பணியில் இது மிகப்பெரிய திரைப்படமாக அமையும் என்று குறிப்பிட்ட அவர், தமது படங்களுக்கு ஒரு தொடக்கப்புள்ளி இருந்ததாகச் சொன்னார்.
அந்தத் தொடக்கப்புள்ளியை அடிப்படையாகக் கொண்டு ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ ஆகிய படங்கள் அமைந்தன என்றார் அவர்.
தனுஷின் 56வது திரைப்படத்தில் அந்தத் தொடக்கத்தின் ஆணிவேர் பற்றி விவரிக்கப்போவதாகக் கூறிய மாரி செல்வராஜ், அதனைக் கண்டுபிடித்து அழிக்க நினைத்தால் என்ன நடக்கும் என்பதுதான் அடுத்த படத்தின் கரு என்றும் சொன்னார்.
‘தனுஷ் 56’ திரைப்படத்தில் நடிக்குமுன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்து முடிப்பார் என்று கூறப்படுகிறது. அந்தத் திரைப்படத்திற்கு உத்தேசமாக ‘தனுஷ் 55’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
‘தனுஷ் 55’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துகொண்டிருப்பதை உறுதிசெய்தார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. அது முடிந்த கையோடு உடனடியாகத் தமது 56வது படத்தில் நடிக்கப்போவதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
தனுஷின் 56வது படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கவிருப்பதாகத் தெரிகிறது. மாரி செல்வராஜுடன் ஏ.ஆர். ரகுமான் கைகோப்பது இது இரண்டாவது முறை. இதற்குமுன் 2023ஆம் வெளிவந்த மாமன்னன் படத்தில் அவர்கள் இணைந்து பணியாற்றினர்.

