சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தின் அனைத்துலக வசூல் ரூ.100 கோடியைக் கடந்துள்ளது.
அவரது நடிப்பில் இச்சாதனையைப் புரியும் நான்காவது படம் இது.
முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. படம் வெளியான பிறகு வெளிவந்த விமர்சனங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருந்தன. எனினும், படத்தின் வசூல் திருப்திகரமாக இருந்தது.
இந்நிலையில், அனைத்துலக அளவில் அப்படம் நூறு கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளதாக படத்தின் தயாரிப்புத்தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதனால் சிவகார்த்திகேயன் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். எனினும், இந்த மகிழ்ச்சியை அவரால் கொண்டாட முடியவில்லை. அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ரோபோ சங்கரின் திடீர் மறைவுதான் இதற்குக் காரணம்.
இதற்கிடையே, ‘மதராஸி’ படத்துடன் ஒரே சமயத்தில் வெளியான ‘கலக்கப் போவது யாரு’ பாலாவின் ‘காந்தி கண்ணாடி’ படமும் சத்தமின்றி வசூலில் அசத்தி வருகிறதாம்.
‘அப்படியானால் சிவாவை ஜெயித்துவிட்டீர்களா’ என்று செய்தியாளர்கள் பாலாவிடம் கேட்க, அவர் பதறிப் போனார்.
‘அப்படியெல்லாம் இல்லை. சிவா அண்ணா உச்சத்தில் இருக்கும் நடிகர். நான் அச்சத்தில் இருக்கும் நடிகர்’ என்று தனக்கே உரிய நகைச்சுவையுடன் பதிலளித்து நழுவுகிறார் பாலா.