திரைத்துறையில் ஒரு நடிகையின் முதல் அனுபவத்தை அவரால் எப்போதும் மறக்க முடியாது என நடிகை மோனிஷா விஜய் கூறியுள்ளார்.
‘கலாட்டா பிங்க்’ எனும் ‘யூடியூப்’ ஒளிவழிக்கு அவர் அளித்த நேர்காணலில் தமது திரையுலக அனுபவம் குறித்த சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மோனிஷா நடித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ எனும் நாடகத்தின் மூலம் அவர் ரசிகர் மத்தியில் பிரபலமானார்.
எதிர்நீச்சல் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ‘மதராஸி’ பட வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகக் கூறிய அவர், அப்போது தமக்கு 16 வயதே நிரம்பியிருந்ததாக சொன்னார்.
மேலும், அப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு அனுபவம் பற்றிப் பேசும்போது, நடிகர் சிவகார்த்திகேயனைப் பற்றி சுவாரசியமான சில தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
படப்பிடிப்புத் தளத்தில் மோனிஷா விஜய்யைப் பார்த்த சிவகார்த்திகேயன், “நானும் உங்களை எதிர்நீச்சல் நாடகத்தில் பார்த்திருக்கிறேன்.
“அதில் வரும் சில காட்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்று கூறியிருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், சிவாவின் அந்தப் பாராட்டு தன்னை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்ததாகவும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன், தனது சக கலைஞரின் பணியை அங்கீகரித்தது பெரும் ஊக்கமளித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதைத் தவிர, தனது தனிப்பட்ட வாழ்க்கை, பல்வேறு திறமைகள், எதிர்கால திட்டங்கள் குறித்தும் மோனிஷா பேசினார்.
குத்துச்சண்டை, சிலம்பம், குதிரையேற்றம், இசைக்கருவிகள் வாசிப்பது என பல திறமைகளை வெளிப்படுத்திய அவர், தான் எதிர்காலத்தில் நடிகர் அஜித்துடன் நடிக்க விரும்புவதாகத் தனது ஆசையைத் தெரிவித்தார்.
மேலும், அழகு, சருமப் பராமரிப்புக்கு இயற்கையான பொருள்களை மட்டுமே பயன்படுத்துவதாகவும் முடிந்தவரை முகப்பூச்சு இல்லாமல் இருக்கவே தான் விரும்புவதாகவும் நடிகை மோனிஷா விஜய் கூறினார்.

