‘மதராஸி’ படம் திரையுலகில் மீண்டும் தன்னை வெற்றிப்பாதையில் திருப்பும் என உறுதியாக நம்புவதாகக் கூறியுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
இந்தியில் இவர் இயக்கிய ‘சிக்கந்தர்’ படம் படுதோல்வி கண்டது. இதையடுத்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘மதராஸி’ படத்தை இயக்கி வருகிறார்.
“நான் ஏற்கெனவே சூர்யாவை வைத்து இயக்கிய ‘கஜினி’ படத்தின் திரைக்கதையைப் போலவும் விஜய்யை வைத்து இயக்கிய ‘துப்பாக்கி’ படத்தின் பாணியைப் பின்பற்றியும் ‘மதராஸி’ படத்தை இயக்குகிறேன். அதனால் ரசிகர்களுக்கு இது புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.
“மேலும் ‘மதராஸி’ என்ற வார்த்தையை வட இந்தியர்கள்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, தமிழர்களைத்தான் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். இதனால் ஏற்படும் சில பிரச்சினைகளை விவரிக்கும் படமாக உருவாகிறது.
“மேலும், ‘கஜினி’ பட நாயகனைப் போல் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பிரச்சினை ஏற்படும். அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதையும் அடிப்படையாகக் கொண்டு ‘மதராஸி’ உருவாகிறது,” என்று கூறுகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம், அக்டோபர் மாதம் வெளியாகிறது.