சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜூ மேனன், விக்ராந்த் நடிப்பில் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளிவந்துள்ளது ஏஆர் முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ திரைப்படம்.
தமிழகத்துக்குள் துப்பாக்கிக் கலாசாரத்தைக் கொண்டுவரத் துடிக்கும் ‘சிண்டிகேட்’ வில்லன்கள். அதனை எதிர்க்கப் பாடுபடும் தேசியப் புலனாய்வு முகவை. இதில் சிவகார்த்திகேயன் எப்படி வந்தார், வில்லன் குழு ஒழிந்ததா, துப்பாக்கிகள் பிடிபட்டனவா என்பதே படத்தின் கதை.
குடும்பத்தினர் அனைவரையும் ஒரு விபத்தில் இழந்ததால் ‘டெலூஷனல் சின்ட்ரோம்’ எனும் ஒருவகை மன நோயினால் பாதிக்கப்பட்ட அப்பாவிக் கதாநாயகன் ‘ரகு’ (சிவகார்த்திகேயன்). அவருக்கு ‘மாலதியின்’ (ருக்மிணி வசந்த்) மீது கண்மூடித்தனமான காதல்.
வில்லன்களிடமிருந்து மாலதியைக் காப்பாற்றும் முயற்சியில், வில்லன்களைக் கொன்று, துப்பாக்கிகளைக் கடலில் கொட்டி அழித்து வெல்கிறார் ரகு.
‘ரகுவாக’ சிவகார்த்திகேயனின் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. அப்பாவிக் கண்கள், அர்த்தமற்ற புன்னகையென மனதைக் கொள்ளைகொள்கிறார். ‘டெலூஷன்’ ஏற்பட்டு மிருகத்தனமாகச் சண்டை போடும்போது, ஆளவந்தான் ‘நந்துவை’ நினைவுபடுத்துகிறார்.
வில்லன்கள் ‘விராட்’ (வித்யூத் ஜம்வால்), ‘சிராக்’ (‘டான்சிங்க் ரோஸ்’ சபீர் கல்லரக்கல்) இருவரும் கதையைத் தூக்கி நிறுத்துகின்றனர். இரண்டாம் பாதியில் ‘விராட்’ மீண்டு வரும் காட்சிகளுக்கு அரங்கம் ஆர்ப்பரித்தது. கட்டுடலுடன் சண்டைக் காட்சிகளில் மிரட்டுகிறார்.
புலனாய்வு அதிகாரியான பிஜு மேனன் சிறு சிறு முகபாவனைகளின் மூலம் ஈர்க்கிறார். அவரது மகனாக வரும் விக்ராந்த், மனநல மருத்துவர் தலைவாசல் விஜய், பிற அதிகாரிகள் என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றனர்.
மனநல நோயாளியின் நடவடிக்கைகளை சற்றே மிகைப்படுத்திக் காட்டியிருந்தாலும் அதிக செயற்கைத்தனமின்றிக் கையாண்டிருப்பது பாராட்டத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
முதற்பாதியில் ஆங்காங்கே தொய்வடைவது போலத் தோன்றினாலும், இடைவேளைக் காட்சி, அதனைத் தொடர்ந்த பிற்பாதி விறுவிறுப்பாக நகர்கிறது.
இரண்டாம் பாதியின் சில சண்டைக் காட்சிகள் வெகுநீளம். வில்லன்கள் இருந்தால் அவர்களுக்குப் பின்னால் ‘சிண்டிகேட்’ இருந்தே தீர வேண்டும் எனும் ‘ஃபார்முலாவைத்’ திணித்துள்ளது கதையில் ஒட்டாமல் தனித்துத் தெரிகிறது.
சிவகார்த்திகேயன் இரு கைகளைக் கோத்து சண்டையிடும் தனித்துவமான பாணி கவனத்தை ஈர்க்கிறது. ‘மாலதியாக’ வரும் ருக்மிணி காதல், சோகம், பயம் என அனைத்தையும் இயல்பாக வெளிப்படுத்துகிறார்.
சிறு நகைச்சுவைக் காட்சிகளுடன் தொடங்கி, சமூகப் பிரச்சினை அடிப்படையில் அமைந்த கதைக்கரு, பிற்பாதியில் ஆழமான காட்சிகள் என முருகதாசுக்கே உரிய பாணியிலான திரைக்கதை சிறப்பு. முழுநீள சண்டைப் படம் என்றாலும் அதீத வன்முறையின்றி கையாண்டிருப்பது ரசிக்கும்படி அமைந்துள்ளது.
‘துப்பாக்கி யார்கிட்ட இருந்தாலும் வில்லன் நான்தான்’, ‘நீ உன்னைப் போலப் பிறரையும் நேசி’, ‘நீ பைத்தியம் இல்ல, நீ மட்டும் தான் நார்மல்’ ‘அது அவன் தலை இல்ல, கொண்டுவரச் சொன்னவனோட தலை’ எனப் போகிற போக்கில் பேசப்படும் சில வசனங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அனிருத்தின் பின்னணி இசை பல காட்சிகளுக்குப் பலம் சேர்க்கின்றது. வில்லன் தோன்றும் சில காட்சிகளில் ‘துப்பாக்கியின்’ பின்னணி இசையை நினைவுபடுத்துகிறது. ‘சலம்பல’ பாடல் தாளம்போட வைக்கிறது. அதீத சினிமாத்தனம் இல்லாத, உறுத்தாத ஒளிப்பதிவு.
தமிழ்த் திரையுலகில் தனக்கெனவொரு தனி இடம் இருப்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ஏ ஆர் முருகதாஸ்.

