இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் புதிய இணையத் தொடரை ‘அம்மு’ எனும் இணையத் தொடரை இயக்கிய சாருகேஷ் சேகர் என்பவர் இயக்குகிறார்.
புதிய இணையத் தொடரில் ஏற்கெனவே மாதவன் நடிப்பதாக தகவல் வெளியானது. இப்போது அவருடன் மற்ற நட்சத்திரங்களும் இணைவதாகக் கூறப்படுகிறது.
கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் இணையத் தொடரில் மலையாள நட்சத்திரமும் பெண்களின் கனவு நாயகனுமான துல்கர் சல்மான், பழைய நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக் ஆகியோரும் நடிப்பதாக தினமலர் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மம்முட்டியின் மகனான துல்கர் சல்மானுடனான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
2000களின் ‘சாக்லெட் பாய்’ நட்சத்திரமான மாதவன், திரைப்படங்களில் மட்டுமின்றி இணையத் தொடர்களிலும் அசத்தி வருகிறார். துல்கர் சல்மான், மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடிப்பில் அசத்தி வருவதுடன் பெண்களின் மனத்தைக் கொள்ளைகொண்டு வருகிறார்.
கெளதம் கார்த்திக், ‘10 தல’, ‘ரங்கூன்’ போன்ற படங்களில் தனது நடிப்புக்காகப் பாராட்டுகளைப் பெற்றவர்.
புதுவிதமான, மாறுபட்ட திரைப்படங்களை வழங்கி தமிழ்த் திரையுலகின் போக்கை மாற்றியவர் என்று கூறப்படுபவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். விஜய் சேதுபதியை நட்சத்திரமாக உருவெடுக்கச் செய்த ‘பீட்ஸா’, பாபி சிம்ஹாவை மாறுபட்ட கதாபாத்திரத்தில் காண்பித்த ‘ஜிகர்தண்டா’, விக்ரம் மற்றும் அவரின் மகன் துருவ் இருவரையும் கொண்ட ‘மகான்’, நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் பழைய ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்தை ரசிகர்களுக்கு நினைவூட்டிய ‘பேட்ட’ ஆகிய படங்களை ரசிகர்களுக்கு வழங்கியிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ‘நவரசா’ இணையத் தொடரில் இடம்பெறும் ஒரு தொகுப்பையும் இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.