பாலியல் தொடர்பான விழிப்புணர்வைச் சிறு வயதிலேயே பிள்ளைகளிடம் விதைத்திட பெற்றோரில் பலர் எண்ணுகின்றனர். திரையுலக நட்சத்திரம் மாதவனும் அதில் மாறுபடவில்லை.
“குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்ப்பது என்றால் எதைப் பற்றியும் அவர்களுக்குச் சொல்லாமல் மறைப்பதல்ல. மாறாக, உலக நடப்பை முன்கூட்டியே புரிய வைக்கவேண்டும்,” என்று அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் மாதவன் கூறியுள்ளார்.
பாலியல் ரீதியான தொடுதல், பாலியல் பாதுகாப்பு, கருத்தடை போன்றவைப் பற்றி மிகச் சிறு வயதிலேயே தமது மகன் வேதாந்திடம் பேசியிருப்பதை மாதவன் பகிர்ந்துகொண்டார்.
“வேதாந்திற்கு 4 வயது இருக்கும்போதே பாலியல் தொடர்பான விவகாரங்கள் பற்றி வெளிப்படையாகப் பேசி இருக்கிறேன்.
“அது எனக்கும் என் மகனுக்கும் இடையிலான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது,” என்ற மாதவன், அந்த வெளிப்படையான அணுகுமுறை தம்மீது தமது மகனுக்கு உள்ள மரியாதையை அதிகரித்ததாகக் கூறினார்.
அத்தகைய கலந்துரையாடல்கள் வேதாந்தை ஒரு பொறுப்புள்ள இளையராக மாற்றியிருப்பதையும் மாதவன் குறிப்பிட்டார்.
திரையுலக நட்சத்திரத்தின் வாரிசாக இருப்பதால் ஏற்படக்கூடிய தேவையில்லாத செல்வாக்கு, புகழின் இருண்ட பக்கம் ஆகியவற்றிலிருந்தும் தமது மகனைப் பாதுகாக்கும் வகையில் அவரை வளர்த்ததாக மாதவன் குறிப்பிட்டார்.
பெண்களை மரியாதையுடன் நடத்துவது குறித்த வாழ்வியல் பாடங்களையும் மாதவன் தமது மகனுக்கு முன்கூட்டியே கற்றுக்கொடுத்ததைச் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
“அதன் மூலம் வெளியுலக அழுத்தங்களை வேதாந்த் எளிமையாகக் கையாள முடியும் என்று கருதினேன்,” என்றார் அவர்.
தேசிய விருது பெற்ற நடிகர் என்ற தமது பிம்பம் வேதாந்தை ஒருபோதும் பாதித்ததில்லை என்ற மாதவன், தாம் பல ஆண்டுகளாக உழைத்து, இயக்கி, நடித்த ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ திரைப்படத்தைப் பார்த்த வேதாந்த் ‘படம் பார்க்க பரவாயில்லை அப்பா’ என்று மட்டுமே கூறியதாக மாதவன் சொன்னார்.
“என் மகனை அவ்வளவு எளிதில் ஈர்க்க முடியாது. நான் நடித்ததில் வேதாந்திற்குப் பிடித்த திரைப்படம் 2009ஆம் ஆண்டில் வெளிவந்த ‘யாவரும் நலம்’ மட்டும்தான்,” என்றார் மாதவன்.
தமது மகன் தமது நிழலில் வளராமல் தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதையே விரும்புவதாக மாதவன் தெரிவித்தார்.
அனைத்துலக அளவில் நீச்சல் போட்டிகளில் பதக்கங்களை வென்றுவரும் வேதாந்த், தாம் கொடுத்த சுதந்திரத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தி வருவதைக் கண்டு மாதவன் மகிழ்ச்சியடைகிறார்.

