ஏறக்குறைய 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ளது ‘தக் லைஃப்’ திரைப்படம்.
இப்படத்துக்காக ஒரு பாடலை எழுதியுள்ளார் கமல். ‘ஜிங்குச்சா’ எனத் தொடங்கும் அப்பாடலை முதலில் வெளியிட்டுள்ளது படக்குழு.
இந்நிகழ்வில் மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான், கமல், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
‘தக் லைஃப்’ படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக், இந்தி நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கியமான காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. எதிர்வரும் ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘தக் லைஃப்’.
விழாவில் பேசிய திரிஷா, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படத்தில் நடித்ததன் மூலம் தனது கனவு மெய்ப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
மணிரத்னம், கமல் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றியதை இதுவரை தம்மால் நம்ப முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“சிம்புவும் நானும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படத்தில் இணைந்து நடித்தோம். இப்போதும் பலர் அந்தப் படத்தைப் பற்றிதான் கேட்கிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
“மீண்டும் எப்போது சேர்ந்து நடிப்பீர்கள் என்று பலரும் என்னிடம் கேட்பார்கள். ‘தக் லைஃப்’ படம் மூலம் அந்த மாயஜாலம் நடந்திருக்கிறது’ என்றார் திரிஷா.
இந்நிகழ்ச்சியில் நடிகை அபிராமி அழகுத் தமிழில் பேசி அசத்தினார். இத்தனைக்கும் அவர் மலையாள நடிகை.
‘விருமாண்டி’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்த இவர், தற்போது மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளைச் சார்ந்த செய்தியாளர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர், அனைவரிடமும் ஆங்கிலத்தில் பேசுமாறு அடிக்கடி நினைவு படுத்தினார். ஆனால், அபிராமியோ தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், தனக்கு ஆங்கிலம் சரியாக வராது எனக் கூறிவிட்டு, தமிழில் பேசினார்.
அடுத்து பேசிய அசோக் செல்வனும் ஆங்கிலத்தை முடிந்தவரை தவிர்த்தார். திரிஷாவுக்கு ஆங்கிலம்தான் ஒத்துவந்தது. ஓரிரு வரிகள் தமிழில் பேசியவர், பின்னர் ஆங்கிலத்தில் மட்டுமே பேசினார்.
சிம்புவும் தமிழில் கொஞ்சம், ஆங்கிலத்தில் அதிகம் என்ற கொள்கையைத்தான் கடைப்பிடித்தார்.
பட நாயகன் கமல்ஹாசன் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறிப் பேசினார்.
“இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ள ஆங்கிலத்தில் பேசுகிறேன். இது தமிழனின் யதார்த்தம்,” என்று கமல் பேசத் தொடங்கியதும் அரங்கம் அதிர்ந்தது.
“இந்தப் படத்தில் இரண்டு நடிகைகள் உள்ளனர். ஆனால் அவர்கள் ஒருநாளும் எனக்கு ‘ஐ லவ் யூ’ கூறியது இல்லை.
“ஜோஜு ஜார்ஜ் என்னை படப்பிடிப்புத் தளத்தில் எப்போது எங்கு பார்த்தாலும் ‘காலை வணக்கம்’ கூட சொல்ல மாட்டார். எங்கு பார்த்தாலும் ‘கமல் சார் ஐ லவ் யூ’ என்றுதான் கூறுவார்.
“நடிகைகள் இருவரும் (திரிஷா, அபிராமி) காதல் மொழியில் பேசாவிட்டால் போகட்டும். நமக்கு ஜோஜு இருக்கிறார் என மனதைத் தேற்றிக் கொள்வேன்,” என்று நகைச்சுவையாகப் பேசினார் கமல்ஹாசன்.