இயக்குநர் வெற்றிமாறனின் உதவியாளர் மதிமாறன் இயக்கும் படம் ‘மண்டாடி’. சூரி கதாநாயகனாக நடிக்கும் அப்படத்தில் மகிமா நம்பியார், சத்யராஜ், அச்சுயுத் குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
அப்படத்தின் அறிமுக விழா ஏப்ரல் 21ஆம் தேதி மாலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய மகிமா நம்பியார், “தமிழில் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு நடிக்கிறேன். எனக்கு இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் மதிமாறனுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்,” எனக் கூறினார்.
மேலும், ‘மண்டாடி’ படத்தின் கதையை இயக்குநர் நிறைய நாயகியிடம் கூறியதாகவும் ஆனால், அக்கதையில் நடிக்கத் தான் மட்டுமே ஒப்புக்கொண்டதாகவும் அவர் தன்னிடம் கூறியதாக மகிமா தெரிவித்தார்.
“நான் அப்படத்தில் நடிப்பதை ஒரு சவாலாகத்தான் நினைக்கிறேன். கதை சொன்ன உடனேயே நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தி நடிக்க ஆரம்பித்து விட்டேன். அதனால் தமிழில் ஒன்றரை ஆண்டுகளாக நடிக்கவில்லை.
“மீண்டும் தமிழில் நடிக்கும்போது ஒரு நல்ல கதையில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். சூரியைத் தான் நான் பின்பற்றுகிறேன். அவருடைய திரைப்பயணம் தான் எமக்கு வழிகாட்டி என அவர் பேசினார்.
அவருடன் பணியாற்ற இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது எனக் கூறிய அவர், அந்த வாய்ப்பை எமக்கு அளித்த அனைவருக்கும் நன்றி என்றார் மகிமா.