‘நூறு சாமி’ படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகை சுவாசிகா.
தான் எப்போதுமே வாழ்க்கை குறித்து திட்டமிட்டதில்லை என்றும் ஆனால், வாழ்க்கை குறித்து கனவு காண்பதுண்டு என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைய தோல்விகளைப் பார்த்துவிட்டதாகவும் நம்பிக்கையைக் கைவிடாமல் போராடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற பாடத்தைக் கற்றுக்கொண்டதாகவும் சுவாசிகா கூறியுள்ளார்.
தொடக்கக் காலத்தில் அதிர்ஷ்டமற்றவர், நடிக்கத் தெரியாதவர், நாயகியாக நடிக்கத் தகுதியற்றவர் என்றெல்லாம் பலரும் கேலி செய்தார்களாம்.
30 வயதைக் கடந்துவிட்டதால் இனி அம்மா வேடத்தில்தான் நடிக்கமுடியும் என்றும் பலர் விமர்சித்துள்ளனர். ஆனால், அந்த அம்மா வேடங்கள்தான் சுவாசிகாவிற்கு நல்ல பெயரையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்துள்ளன.
மிகுந்த சிரமத்தில் இருக்கும்போது ‘இது நமக்குச் சரிப்பட்டு வராது’ என்று சோர்ந்துவிடாமல் இருந்தாலே நல்லது நடக்கும் என்றும் தனக்கு அதுதான் நடந்திருக்கிறது என்றும் சுட்டிக்காட்டுகிறார் சுவாசிகா.
“சினிமா என்ன வேண்டுமானாலும் செய்யும். சரியான வாய்ப்புக்காக ஆண்டுக்கணக்கில்கூட காக்கவைக்கும். அதை ஏமாற்றாமல், போலித்தனம் இல்லாமல் மதித்தால் அது எல்லாம் தரும். பணம் ஈட்டும் கருவியாக மட்டும் அதைக் கருதக்கூடாது.
“நாம் தாக்குப்பிடித்து நின்றுவிட்டால் தாயைப் போன்று அரவணைக்கும். தவறு செய்தால் பின்னங்காலால் தள்ளிவிடும். சரியாக நடந்தால் மகிழ்ந்து உலகத்து வெளிச்சத்தையெல்லாம் நம் மேல் பாய்ச்சும்.
“வெற்றி என்பதுகூட சில வேளைகளில் எளிதுதான். அதைத் தக்கவைத்துக்கொள்ளவே இங்கு போராட வேண்டியிருக்கும். மக்களின் கைத்தட்டல்தான் நம் உயரத்துக்குக் காரணம் என்ற உண்மை நம் மனத்தில் உறைக்க வேண்டும்.
“பழைய வாழ்க்கையை மறவாமல், வானத்தில் மிதக்காமல் இருந்தால் சினிமா என்றைக்கும் நம்மைக் கைவிடாது,” என்று தத்துவார்த்தமாகவும் அனுபவபூர்வமாகவும் பேசுகிறார் சுவாதிகா.
நடிகை சாய் பல்லவிதான் தொழில் ரீதியில் தனது ரசனைக்குரிய முதல் எதிரி என்று குறிப்பிட்டுள்ள சுவாசிகா, அவரது நடிப்பு மிக இயல்பாக இருக்குமெனவும் பாராட்டுகிறார்.
“எப்போதும் நிலையாய் நிற்கும் சந்தை மதிப்பு, நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் பக்குவம், எதிலும் சிக்கிவிடாமல் செயல்பட்டு, நிம்மதியாக இருக்கும் பக்குவம் ஆகிய அனைத்துமே சாய் பல்லவியின் தனித்தன்மை. ‘அமரன்’ படத்தில் அவரது நடிப்பு அற்புதம் என்றும் சொல்லும் அளவில் இருந்தது.
“இப்போதெல்லாம் நானும் அவரும் சேர்ந்து நடிப்பதுபோல் எனக்குக் கனவு வருகிறது. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்,” என்று ஆனந்த விகடன் ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் சுவாசிகா.
காலஞ்சென்ற முன்னாள் இந்திய அதிபர் அப்துல் கலாம் கூறியதுபோல் கனவு காண்பது என்றால் சுவாசிகாவுக்கு மிகவும் பிடிக்குமாம்.
“ஒருமுறை என் அம்மாவிற்கு பிறந்தநாள் கொண்டாட வேண்டுமென்று ஒரு திட்டம் போட்டேன். நான் மனத்தில் போட்ட திட்டத்தையே கனவில் காணத் தொடங்கினேன். அப்பாவுக்கு இந்தச் சட்டை, அம்மாவுக்கு இந்தச் சேலை, கேக் எப்படி இருக்கவேண்டும் என்று அந்த மொத்தக் கொண்டாட்டத்தையும் கனவிலேயே பார்த்து ரசித்தேன். இப்படிக் கனவு காண்பது எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்று சுவாசிகா கூறியுள்ளார்.

