தமிழ்த் திரையுலகில் காவல்துறையைப் பற்றிய கதைகள் என்றாலே கம்பீரமான பின்னணி இசை, வில்லன்களை ஒற்றைக் கையில் வீழ்த்தும் ‘சிங்கம்’, ‘சாமி’ போன்ற நாயக பிம்பங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்த வழக்கமான திரைமொழியை உடைத்து, காவல் அமைப்பில் உள்ள உண்மையான அதிகாரப் படிநிலைகளையும் அடித்தட்டு ஊழியர்களின் வலிகளையும் பேச வருகிறது அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமாரின் ‘மக்கள் காவலன்’ திரைப்படம்.
அரசு வேலை என்ற கனவோடு காவல்துறையில் அடியெடுத்து வைக்கும் ஒரு நடுத்தர வர்க்க இளையர், அங்கே சந்திக்கும் அடக்குமுறைகள், நிராகரிப்புகள், அதிகாரப் படிநிலையின் கசப்பான அனுபவங்களை மையமாகக் கொண்டு இத்திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு சாதாரண கிராமத்து இளைஞன், காவல்நிலையத்தின் கதவுகளுக்குப் பின்னால் நடக்கும் அநீதிகளைக் கேள்வி கேட்டு, எவ்வாறு ஒரு கலகக்காரனாக மாறுகிறான் என்பதை ஓர் அதிரடிப் படைப்பாக இயக்கியுள்ளார் சந்தோஷ் குமார்.
நாயகனாக நடித்துள்ள மணிகண்டன், வழக்கமான அதிரடி காவல் அதிகாரியாக அல்லாமல், இயல்பான ‘வீட்டுப்பையன்’ போன்ற தோற்றத்தில் நடித்திருப்பது கதைக்கு மேலும் வலுச்சேர்க்கிறது.
தென் தமிழகக் கிராமத்துக் காவல்நிலையப் பின்னணியில் நடக்கும் இக்கதைக் காவல்துறை சம்பந்தப்பட்ட கதையாக மட்டுமன்றி, நகராட்சி அலுவலகம், தகவல் தொழில்நுட்பத்துறை என அதிகார அடக்குமுறை நிலவும் எந்தவொரு பணிச்சூழலுக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பா. ரஞ்சித், பிர்லா ஸ்டூடியோஸ், அதிதி ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், ஆந்திராவைச் சேர்ந்த திவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், வாகை சந்திரசேகர், ஏ.வெங்கடேஷ், உன்னி மாயா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில், கவிஞர்கள் வெய்யில், உமா தேவி இருவரும் பாடல்களை எழுதியுள்ளனர்.
வன்முறையைக் கொண்டாடாமல், பாதிக்கப்பட்டவர்களின் குரலாகவும் வாழ்க்கையின் உண்மைகளைப் பிரதிபலிக்கும் களமாகவும் உருவாகியிருக்கும் ‘மக்கள் காவலன்’ படம், தமிழ்ச் சினிமாவில் ஒரு புதிய உரையாடலைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

