பிரபல மலையாள இளம் நடிகர் அகில் விஸ்வநாதன் (30), தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் மலையாளத் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளத்தில் வெளியான ‘சோழா’, ‘ஆபரேஷன் ஜாவா’ உள்ளிட்ட சில படங்களில் அகில் விஸ்வநாதன் நடித்துள்ளார். குறிப்பாக, ‘சோழா’ படத்தில் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பிற்காகக் கடந்த 2019ஆம் ஆண்டு கேரள மாநில அரசின் விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பள்ளி மாணவராக இருந்தபோதே தனது சகோதரர் அருணுடன் இணைந்து ‘மங்காண்டி’ என்ற தொலைக்காட்சிப் படத்தில் நடித்ததற்காக, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான மாநில அரசின் விருதையும் இவர் வென்றுள்ளார்.
திருச்சூர் மாவட்டம் மத்தத்தூர் பகுதியில் வசித்து வந்த அகில், வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது தாயார் கீதா வேலைக்குப் புறப்படும்போது, அகில் அசைவற்றுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்குத் தகவல் அளித்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

