ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூருக்கு எதிராக மலையாள நடிகை பவித்ரா மேனன் வெளியிட்டுள்ள சில கருத்துகளும் காணொளிகளும் திரையுலக வட்டாரங்களில் புது விவாதங்களைக் கிளப்பியுள்ளன.
ஜான்வி கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகியுள்ள ‘பரம் சுந்தரி’ படத்தின் முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியானது.
கதைப்படி, வட இந்திய இளையரான சித்தார்த்தும் தென்னிந்தியப் பெண்ணான ஜான்வியும் காதலிக்கிறார்கள். இதனால் ஏற்படும் பிரச்சினைகளை இருவரும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் கதை எனக் கூறப்படுகிறது. ஆனால், முன்னோட்டக் காட்சித்தொகுப்பிலேயே ஜான்வியின் மலையாள உச்சரிப்பு கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. நடிகை பவித்ரா மேனனும் இது குறித்துதான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“நான் ஒரு மலையாளி. ‘பரம் சுந்தரி’ படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தேன். மலையாளம் நன்கு தெரிந்த ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை. மலையாளத் திரையுலகில் இருக்கும் நடிகைகள் திறமை குறைந்தவர்களா? பாலிவுட்டில் நடப்பதுபோல் கேரளாவில் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை,” என்று தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் பவித்ரா.
இந்தக் காணொளியில் தொடக்கத்தில் இந்தியில் சரளமாகப் பேசும் அவர், பிறகு மலையாளத்தில் பேசுகிறார். இந்தியில் பேசுவதுபோல் தம்மால் மலையாள மொழியிலும் நன்றாகப் பேச முடியும் எனக் கூறுகிறார்.
“இந்திப் படத்தில் ஒரு மலையாளிக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு மலையாளியைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமா? இப்படித்தான் கடந்த 1990களில் பஞ்சாபிகளைச் சித்திரிக்க ‘பல்லே பல்லே’ நடனமாடினார்கள். ஆனால் இது 2025ஆம் ஆண்டு. ஒரு மலையாளி எப்படிப் பேசுவார், அவரும் எல்லாரையும்போல் சாதாரணமானவர்தான் என்பதெல்லாம் அனைவருக்கும் தெரியும்.
“மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு எல்லா இடத்திலும் நாம் மோகினியாட்டத்தை மட்டும் ஆடுவதில்லை. எனக்கு ஜான்வி கபூர் மீது எந்தக் கோபமும் கிடையாது. ஆனால், ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?” என்று பவித்ரா மேனன் எழுப்பியுள்ள கேள்வி, பாலிவுட்டில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.