இந்தியத் திரையுலகில் மலையாளத் திரையுலகம் தனக்கென ஓர் இயல்பான தனித்துவமான முத்திரையைப் பதித்துவருகிறது.
மிகக் குறைந்த செலவில் எடுக்கப்படும் படங்கள் என்ற பிம்பத்தைத் தாண்டி, பிரம்மாண்ட பட்ஜெட்டுகளிலும் மலையாளத்தில் தரமான படங்கள் எடுக்கப்படுகின்றன.
மலையாளத் திரையுலகில் நடிகரையோ இயக்குநரையோ அணுக இடைத்தரகர்களோ பெரிய முகமைகளோ(ஏஜென்சி) தேவையில்லை என்று நடிகர் பிரித்விராஜ் பகிர்ந்துள்ளார்.
ஓர் இயக்குநரே நேரடியாக நடிகரை கைப்பேசியில் அழைத்து கதை குறித்துப் பேச முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நேரடி அணுகுமுறையே மலையாளத் திரைப்படங்களுக்கு ஓர் இயல்பான ஆன்மாவைத் தருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
பாலிவுட்டில் ஒரு நடிகரை அணுக முதலில் அவருடைய மேலாண்மை நிறுவனத்தை அணுக வேண்டும். நிறுவனம் அதை நடிகரின் தனிப்பட்ட மேலாளரிடம் கொண்டு செல்லும் என்று விளக்கினார்.
மேலாளர் நடிகரிடம் பேசி இயக்குநருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வார் என்று தெரிவித்தார்.
“சந்திப்பு முடிந்து இருவரும் ஒப்புக்கொண்ட பிறகு, முகமை பெரிய தொகையைச் சம்பளமாகக் கேட்கும்,” என்று கூறினார்.
தயாரிப்பாளர் அதில் பாதியைக் கொடுப்பதாகப் பேரம் பேசுவார் என்று பிரித்விராஜ் சுட்டிக்காட்டினார்.
“இந்த நெறிமுறைகள் பாலிவுட்டின் நடைமுறைக்கு உகந்ததாக இருக்கலாம்; ஆனால் திரைப்படங்களை உருவாக்கும் செயல்முறையை இது சிக்கலாக்குகிறது,” என்றார்.
மலையாளப் படங்கள் இப்போதும் வெறும் 15 நாள்களில் 5 கோடியில் எடுக்கப்படுவதாகப் பரவும் பொதுவான கருத்து தவறானது.
இன்று 100 கோடி முதலீட்டிலும் 150 நாள்கள் என்ற திட்டத்திலும் மலையாளப் படங்கள் எடுக்கப்படுகின்றன.
பட்ஜெட் பெரிதானாலும் படக்குழுவினருக்கு இடையேயான மனிதநேயமும் எளிய தொடர்பும் மலையாளத்தில் துளியும் மாறவில்லை என்றார்.
மோகன்லால், மம்முட்டி, பகத் பாசில், பிரித்விராஜ் ஆகியோர் லாபப் பங்கீட்டு முறையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
இது தயாரிப்பாளர்களின் பெரும் நிதிச் சுமையைக் குறைப்பதாக அவர் தெரிவித்தார்.
1990களுக்கு முன்பு வரை பாலிவுட்டில் ஒழுங்கமைக்கப்படாத நிதித் தலையீடுகள் இருந்தன.
கார்ப்பரேட் ஸ்டூடியோக்கள் வந்த பிறகே முதலீடுகளுக்குப் பாதுகாப்பு கிடைத்தாலும், தற்போது அது அளவுக்கு மீறிய அதிகாரத்துவமாக மாறியுள்ளது.
பணம் மட்டுமே நல்ல சினிமாவைப் படைக்காது; எளிய கலைத்தொடர்பே திரைப்படத்தின் ஆன்மாவைத் தீர்மானிக்கிறது என்று பகிர்ந்துகொண்டார் பிரித்விராஜ்.
