தமிழ்த் திரையுலகம் பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதாக திரையுலகத்தினர் புலம்பி வந்தனர். அதே புலம்பல் இப்போது மலையாளக் கரையோரமும் கேட்கத் தொடங்கியுள்ளது.
அங்கு தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், விநியோகிப்பாளர்கள் சங்கம் ஆகியவை தங்களுடைய பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகக் கேரள அரசிடம் மனு அளித்திருப்பதாகவும் மாநில முதல்வர் பினராயி விஜயனும் சம்பந்தப்பட்ட சங்கத்தினரை அழைத்து அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதாக சமாதானம் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், உருப்படியாக ஏதும் நடக்கவில்லையாம்.
எனவே, ஜனவரி 22ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த மலையாளத் திரையுலகத்தினரும் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
திரையரங்க நுழைவுக்கட்டணத்துக்கு ‘ஜிஎஸ்டி’ விதிப்பது, அதிகப்படியான கேளிக்கை வரி, திரையரங்குகளுக்கு விதிக்கப்படும் கூடுதல் மின் கட்டணம் ஆகியவற்றையெல்லாம் ஒழுங்குப்படுத்த வேண்டும் என்பதே மலையாளத் திரையுலகத்தினரின் முக்கியமான கோரிக்கைகள்.
இந்நிலையில், வரும் ஜனவரி 14ஆம் தேதியன்று கேரள அரசு திரையுலகத்தினரை அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கத் தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் திட்டமிட்டபடி 22ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கும் எனக் கூறப்படுகிறது.
இன்றைய தேதியில் ஓடிடி தளங்களில் மலையாளப் படங்கள்தான் அதிக எண்ணிக்கையில் வெளியாகின்றன.
“ஒருநாள் வேலைநிறுத்தம் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடாது. ஆனால், அடுத்தகட்டமாகப் போராட்டம் பெரிய அளவில் வெடித்தால் பட வெளியீடுகள் தாமதமாகும். எங்களுக்குப் பெரும் இழப்பு ஏற்படும்,” என ஓடிடி நிர்வாகத் தரப்பினரை கவலைப்படுகிறார்களாம்.


