அண்மையில் வெளியான அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் ஒலிக்கும் ‘புலி புலி’ பாடலை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
அநேகமாக அஜித் ரசிகர்கள் அனைவரது கைப்பேசிகளிலும் இந்தப் பாடல் ஒலித்தபடியே இருக்கும். ஆனால், இந்தப் பாடல் பத்து ஆண்டுகளுக்கு முன்பே உருவானது என்பது பலருக்குத் தெரிந்திருக்கவில்லை.
ஆம், 2012ஆம் ஆண்டு மலேசியாவில் உருவான ‘அட்டரனா’ என்ற இசைத்தொகுப்பில் இந்தப் ‘புலி புலி’ பாடல் இடம்பெற்றிருந்தது.
மலேசியத் தமிழரும் இசைக் கலைஞருமான டார்க்கீ நாகராஜ் பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று. தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்திற்காக மீண்டும் இந்தப் பாடலைப் பதிவு செய்துள்ளனர்.
மைக்கல் ஜேக்சனின் தீவிர ரசிகரான டார்க்கீ நாகராஜ், அவரைப் போலவே தனது சிகையலங்காரத்தை மாற்றிக்கொண்டுள்ளார்.
12 வயதிலேயே பாடத் தொடங்கிய இவர், மேடைகளில் மைக்கல் ஜாக்சன் போலவே நடனமாடவும் செய்தார். கூடவே தனது நடன அசைவுகளையும் அவ்வப்போது சேர்த்துக்கொள்வார்.
கடந்த 1996ஆம் ஆண்டு நண்பர்களோடு இணைந்து ‘சம்பா ராக்’ என்ற புதிய இசைக்குழுவைத் தொடங்கினார் டார்க்கீ நாகராஜ்.
இந்தக் குழுவின் இசைத்தொகுப்பில்தான் உலக அளவில் பிரபலமான ‘அக்கா மக’ பாடல் இடம்பெற்றுள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு இந்தப் பாடலை வெளியிட்டார் டார்க்கீ.
தொடர்புடைய செய்திகள்
சசிக்குமார் நடித்திருந்த ‘குட்டிப் புலி’ படத்தில் இப்பாடல் பயன்படுத்தப்பட்டது.
அடுத்து, சந்தோஷ் நாராயணன், ‘கபாலி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உலகம் ஒருவனுக்கா’ பாடலை டார்க்கி நாகராஜை வைத்துப் பாட வைத்தார்.
பலரைப் போலவே இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் டார்க்கீயின் மிகப்பெரிய ரசிகர்.
தனது பள்ளிப் பருவத்தில் இருந்தே டார்க்கீயின் பாடல்களை ரசித்துக் கேட்பதுண்டு என்கிறார் ஆதிக்.
மலேசியாவில் இருந்து சென்னைக்குப் பறந்து வந்த டார்க்கீயை வைத்து வித்தியாசமான முறையில் இப்பாடலைப் பதிவு செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, அஜித்துக்காக இன்னொரு பாடலைப் பாடுமாறு டார்க்கீக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் ‘தல’ ரசிகர்கள்.