திரையுலகில் மற்ற முன்னணி நடிகைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நடிகை மமிதா பைஜூ தற்போது முன்வரிசைக்கு வந்துள்ளார்.
திரைப்படச் சம்பளத் தொகையைத் தவிர மற்ற அனைத்து செயல்பாடுகளிலும் அவர் முன்னணி நடிகைக்கு இணையாக உயர்ந்துள்ளார்.
திரையுலகில் சில முன்னணித் திரைப்பட நடிகர்கள்கூட இவரின் கால்ஷீட்டுக்காகக் காத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நடப்பு ஆண்டில் அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் சத்தமில்லாமல் வசூலில் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளன.
அவர் முதன்மை வேடத்தில் நடித்துத் திரைக்கு வந்த ‘ஜனநாயகன்’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய திரைப்படங்கள் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தன.
அந்த வரிசையில், கடந்த வாரம் திரைக்கு வந்த ‘பெத்லேகேம் குடும்ப யூனிட்’ மலையாளத் திரைப்படமும் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்தப் படம் வரும் 3ஆம் தேதி தமிழ் மொழியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் திரைப்படக் குழுவினரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒரே ஆண்டில் தொடர்ந்து 100 கோடி ரூபாய் வசூலைத் திரட்டியுள்ள மூன்று திரைப்படங்களைக் கொடுத்து மமிதா ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்துள்ளார்.
முன்னதாகக் கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ‘டியூட்’ திரைப்படமும் 100 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்தது.
தொடர் வெற்றிகளால், திரையுலகில் ‘100 கோடி ரூபாய் கதாநாயகி’, ‘ராசியான நடிகை’ என்ற சிறப்பான அடையாளங்கள் அவருக்குக் கிடைத்துள்ளன.
திரைப்பட நடிகர் நிவின் பாலியைப் பொறுத்தவரை 100 கோடி ரூபாய் வசூல் சாதனையைக் கடக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும்.
இதற்குமுன்னர் அவர் நடிப்பில் வெளியான ‘சர்வம் மாயா’ திரைப்படமும் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்து சாதனை படைத்திருந்தது.
புதிதாக வெளியான ‘பெத்லேகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தில் சுரேஷ் கிருஷ்ணா, பிந்து பனிகர், வினய் போர்ட், ரோஷன் ஷாநவாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் ஷ்யாம் மோகன், ஷமீர் கான், ஸ்ரீண்டா, பார்வதி அய்யப்படாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைப்பட ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் சாதனை படைத்த மமிதா பைஜூவுக்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


