பாலியல் சர்ச்சை குறித்த அதிர்ச்சியில் மம்முட்டி, மோகன்லால் மெளனம் காக்கின்றனர்: ரேவதி

2 mins read
03d61534-87a1-4da9-b0a7-46f3f07fb223
‘பஸூக்கா’ படத்தில் மம்முட்டி. - காணொளிப் படம்: சரிகம மலையாளம் / யூடியூப்
multi-img1 of 2

கேரளத் திரையுலகில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக ஹேமா குழு அறிக்கை சமர்ப்பித்த நிலையில் இந்த விவகாரம் மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத் திரையுலகில் அண்மைக் காலமாக எரிமலைபோல் வெடித்திருக்கும் பாலியல் குற்றச் சம்பவங்களுக்கு மூத்த நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் எந்த கருத்தும் வெளியிடவில்லை. திரையுலகின் மாபெரும் பிரபலங்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் இதற்குக் கருத்து எதுவும் சொல்லாததற்கு காரணம், அவர்கள் தங்களைப் போலவே அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்கிறார் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கொடிகட்டிப் பறந்த நடிகை ரேவதி.

நடிகை ரேவதி.
நடிகை ரேவதி. - கோப்புப் படம்: தி இந்து / இணையம்

அதிர்ச்சியில் தான் உட்பட பலர் இதுபற்றிப் பேசுவதாகவும் அவ்விருவரும் அமைதியாக இருப்பதாகவும் ரேவதி சொன்னார்.

இது தொடர்பாக மலையாளத் திரையுலகின் மூத்த நடிகரும் மத்திய துணை அமைச்சருமான சுரேஷ் கோபியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

பிரபல மலையாள நடிகரும் மத்திய துணை அமைச்சருமான சுரே‌ஷ் கோபி.
பிரபல மலையாள நடிகரும் மத்திய துணை அமைச்சருமான சுரே‌ஷ் கோபி. - படம்: ஒன்மனோரமா

அதற்கு அவர், “நான் புரிந்துகொண்டது என்னவென்றால், இவை அனைத்தும் உங்களுக்கான (ஊடகங்கள்) தீனி போன்றதே. இதைப் பயன்படுத்தி உங்களால் பணம் சம்பாதிக்கமுடியும். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்தப் பிரச்சினைகள் நீதிமன்றத்தின் முன் உள்ளன. நீங்கள் உங்களுடைய சொந்த ஆதாயத்துக்காக மக்களை ஒருவருக்கொருவர் சண்டையிட வைப்பது மட்டுமல்ல, திரையுலகின் மீதான பொதுமக்களின் பார்வையையும் தவறாக வழி நடத்துகிறீர்கள்,” என்று ஊடகங்களைச் சாடினார்.

இதற்கிடையே, பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டதாக நடிகை ரேவதி சம்பத் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து பிரபல குணச்சித்திர, வில்லன் நடிகரான சித்திக், கேரள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகிக்கொண்டுள்ளார்.

‘ரங்கூன்’ படத்தில் மலையாள நடிகர் சித்திக்.
‘ரங்கூன்’ படத்தில் மலையாள நடிகர் சித்திக். - காணொளிப் படம்: சோனிமியூசிக்சவுத்வெவோ / யூடியூப்

‘வெந்து தணிந்தது காடு’, ‘ரங்கூன்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ள சித்திக், திருவனந்தபுரத்தில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் தன்னைப் பாலியல் ரீதியாக ஒத்துழைக்கச் சொன்னதாகவும் ஒரு மணிநேரத்துக்குத் தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் ரேவதி சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சித்திக் பதவி விலகியதைத் தொடர்ந்து அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரையுலகம்திரைச்செய்திசினிமா