மலையாளத் திரையுலகில் ‘சூப்பர் ஸ்டார்’ஆக இருக்கும் மம்முட்டி தமிழில் அழகன், தளபதி, மறுமலர்ச்சி, ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், கேரள அரசின் மாநிலத் திரைப்பட விருதுகளின் சிறந்த நடிகர் விருது மம்முட்டிக்கு வழங்கப்பட்டது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவருக்கு விருதை வழங்கினார்.
இது மம்முட்டி பெற்ற ஏழாவது மாநில விருதாகும். ‘பிரம்மயுகம்’ திரைப்படத்திற்காகச் சிறந்த நடிகர் விருதை அவர் பெற்றார்.
2024ம் ஆண்டு மலையாளத்தில் ‘பிரம்மயுகம்’ திரைப்படம் வெளியானது. அதில் மம்முட்டி மந்திரவாதியாக நடித்தார்.
இந்தப் படத்தை ராகுல் சதாசிவன் என்பவர் இயக்கினார்.
‘பிரம்மயுகம்’ கறுப்பு வெள்ளை திரைப்படமாகும். இதில் மூன்று பேர் மட்டுமே பெரும்பாலான நேரங்களில் திரையில் வருவார்கள்.
இங்கிலாந்தில் உள்ள கலை பண்பாட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் திரைப்படப் பயிற்சிப் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு ‘பிரம்மயுகம்’ படம் ஒரு பாடமாகத் திரையிட்டுக் காட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
1984, 1989, 1993, 2004, 2009, 2023ஆம் ஆண்டுகளில் சிறந்த நடிகருக்கான கேரள அரசின் மாநில விருதை மம்முட்டி பெற்றுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, இந்தியாவின் 77வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சு 2026ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலை அண்மையில் அறிவித்தது.
இதில் மம்முட்டிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பலரும் மம்முட்டிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மம்முட்டி வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “பத்ம பூஷண் என்கிற உயரிய விருதால் கௌரவிக்கப்பட்டதற்காகத் தேசத்திற்கும், மக்களுக்கும், அரசிற்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

