தமிழ்த் திரையுலகைக் கலக்கிய டி. ராஜேந்தர்

3 mins read
8479a66a-36e5-4ce6-b137-8b3e738dfd83
டி. ராஜேந்தர். - படம்: இந்திய ஊடகம்

1980களில் பாலச்சந்தர், கே. எஸ். கோபாலகிருஷ்ணன், பாக்யராஜ், விசு போன்றோர் தமிழ்த் திரையுலகில் பெயர்பெற்ற அதே காலகட்டத்தில் அவர்களுக்கு ஈடாக, அவர்களுக்கும் மேலான பொறுப்புகளை ஏற்று திரையுலகைக் கலக்கி வந்தவர் டி. ராஜேந்தர். படத் தயாரிப்பு, திரைக்கதை, உரையாடல், பாடலாசிரியர், நடிப்பு, இயக்கம், நடனம், பாட்டு, இசையமைப்பு, ஒளிப்பதிவு, பட விநியோகிப்பு என ஏகபோக பொறுப்புகளைச் சுமந்து பலரும் வியக்கும் வண்ணம் செயல்பட்டார். 

அவர் இயக்கி, தயாரித்த படங்கள் பாமர மக்களிடையே பெருவரவேற்பைப் பெற்றன. எதுகை-மோனையில் உரைநடையை அவர் பிரபலப்படுத்திய அளவுக்கு வேறு எவராலும் செய்ய முடியாது. அது மட்டுமல்ல, அவருடைய படங்களில் அவருடன் சேர்ந்து நடிக்கும் நடிகைகளை அவர் தொடாமலே நடிப்பார். அவரைப்போல், சக நடிகைகளைக் கண்ணியமாக நடத்தும் ஒருவரைப் பார்க்க முடியாது எனப் பலர் கூறுவர். 

அன்றைய பல பிரபலக் கவிஞர்களை மிஞ்சும் அளவுக்கு அவருடைய பாடல் வரிகள் இருக்கும். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஒருதலை ராகம் படத்தில் அவர் படத்தின் நாயகனுக்கு எழுதிய பாடல்கள். படத்தின் நாயகன் தன்னுடன் படிக்கும் சக மாணவி சுபத்ரா மீது காதல் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினாலும் அதை வெளியில் காட்டிக்கொள்வதில்லை. ஒருநாள் நாயகன் தன் காதலை சுபத்ராவிடம் சொல்ல அவளோ, தனது தந்தை குடும்பத்தைத் தவிக்கவிட்டுச் சென்றதை எண்ணி, கோபத்துடன் அவனைத் திட்டி காதலை உதறித் தள்ளுகிறாள். இனி அவளுடன் பேசுவதில்லை என்று முடிவெடுத்து பொறுமை காக்கிறான். இறுதியில் அவள் மனம் மாறி காதலைச் சொல்ல வரும்போது, இறந்தும் விடுகிறான். அவனது காதல் ஒருதலை ராகமாகவே முடிவதுதான் கதை. 

பாடல் ஒன்று, “இது குழந்தை பாடும் தாலாட்டு,” என்று தொடங்கும். படத்தின் நாயகன் தன் காதல் ஒருதலைக் காதலாகிவிட்டதை எண்ணி விரக்தியில் பாடும் பாடலாக இது அமையும். தனது காதல் நிறைவேறாத, நிறைவேற முடியாத காதல் என்ற அர்த்தத்தில் இயற்கை விதிகளுக்கு புறம்பாக பாடல் வரிகள் அமைந்திருக்கும். “இது குழந்தை பாடும் தாலாட்டு, இது இரவு நேர பூபாளம், இது மேற்கில் தோன்றும் உதயம், இது நதியில்லாத ஓடம், 

“நடை மறந்த கால்கள் தன்னில் தடயத்தைப் பார்க்கிறேன், வடம் இழந்த தேர் ஒன்றை நாள்தோறும் இழுக்கிறேன், சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன், உறவுராத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்,

“வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன், வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன் விடிந்துவிட்ட பொழுதில்கூட விண்மீனைப் பார்க்கிறேன், விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்,” 

“உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது, உறவுருவாள் எனதானோ மனதை நான் கொடுத்தது, உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது, ஒருதலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது, 

“இது குழந்தை பாடும் தாலாட்டு...” 

என்று எல்லா வரிகளும் ஏறுக்குமாறாக, இயற்கை விதிகளுக்கு எதிராக அமைந்திருக்கும், கேட்கவே கொள்ளை இன்பம் தரும். 

படத்தில் சுபத்ரா, ராஜாவின் காதலை ஏற்பதாகச் சொல்ல வரும்போது, ராஜா ‘என் கதை முடியும் நேரமிது என்பதைச் சொல்லும் ராகமிது, அன்பினில் வாழும் உள்ளமிது, அணையே இல்லா வெள்ளமிது...’ என்று பாடி உயிர் பிரியும் சோகம் நிகழும். பாடலில், “ஒளியாய் தெரிவது வெறும் கனவு, அதன் உருவாய் எரிவது என் மனது...” என்ற பாடல் வரியைத் தொடர்ந்து வரும் இசையமைப்பு வேறு எவராலும் கொண்டு வரமுடியுமா என்பது சந்தேகமே, அந்த அளவுக்குச் சிறப்பாக டி எம் எஸ் பாடலுக்கு இசையமைத்திருப்பார் டி. ராஜேந்தர். 

அந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. டி எம் சௌந்தரராஜனின் குரலில் பழைய இனிமை இல்லை என்று கருதப்பட்ட நேரத்தில் அந்த சோக கீதத்தை அவர் அருமையாகப் பாடி அசத்தியிருப்பார். பாடலைக் கேட்ட நான் முதலில் அதற்கு இளையராஜா இசையமைத்துள்ளார் என்றுதான் எண்ணினேன். அவ்வளவு அருமையாக ரயில் வண்டி போவதுபோல் இசை அமைந்திருக்கும். 

அது மட்டுமா, ஒஸ்தி படத்தில், “வடக்கே என்னைப் பத்தி கேட்டுப் பாரு,” என்ற பாடலை எல் ஆர் ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடியிருப்பார். அண்மையில் வந்த ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தில்கூட “சிட்டிகூ..” என்று வரும் பாடலை தனது நடனத்துடன் தொடக்கி வைத்துள்ளார் டி. ராஜேந்தர். 

அவரது முதல் படமான ‘ஒருதலை ராகம்’ படத்துடன் ரயில் பயணங்களில், உயிருள்ளவரை உஷா, மைதிலி என்னைக் காதலி போன்ற படங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

குறிப்புச் சொற்கள்