தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்கிறார் மஞ்சு வாரியர்

2 mins read
a8c71c4c-98df-4ef2-8991-e19208a29d0d
‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராணாவுடன் மஞ்சு வாரியர். - படம்: ஊடகம்

“அழகு என்று எதுவும் தனியாக கிடையாது. நம்முடைய செயல்கள்தான் நம்மை அழகாக்குகின்றன என்கிறார் மஞ்சு வாரியர்.

மஞ்சு வாரியர் மலையாளத் திரைப்படங்களில் வியந்து பேசப்படும் ஒரு நடிகையாக இருந்து வருகிறார்.

இவர் அஜித்துடன் ‘துணிவு’, தனுஷுடன் ‘அசுரன்’, விஜய் சேதுபதியுடன் ‘விடுதலை 2’ போன்ற தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும் தற்போது அவர் ரஜினியுடன் நடித்திருக்கும் ‘வேட்டையன்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

அவருக்கு 46 வயது என்று வெளியே சொன்னால் யாரும் நம்பமுடியாத அளவுக்கு அழகாகவும் உடற்கட்டுடனும் காணப்படுகிறார்.

இளம் வயது நடிகைகள்கூட தேர்வு செய்யத் தயங்கும் அழுத்தமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நாயகர்களுக்கு இணையாக திரையில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார் மஞ்சு வாரியர்.

அவரை ஓர் இயற்கையான அழகி என்று சொல்லலாம். தன்னை அழகுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கமாட்டார்.

பெரும்பாலும் எளிமையாக மிகமிகக் குறைந்த ஒப்பனையில்தான் மஞ்சு வாரியர் இருப்பார். வெளியில் சென்றால்கூட மிகக் குறைவான ஒப்பனையில்தான் செல்வார். சேலை போன்ற பாரம்பரிய உடைகளில்கூட மிகக் குறைவான ஒப்பனை, நகைகளைத்தான் தேர்வு செய்து அணிவார்.

ஒருமுறை பேட்டி ஒன்றில் இந்த வயதிலும் நீங்கள் இவ்வளவு அழகாக இருக்க காரணம் என்ன என்று கேட்டபோது “அழகு என்று தனியே ஒரு விஷயம் இல்லை. நம்முடைய செயல்கள்தான் நம்மை அழகாக்குகின்றன. பிறருடைய துயரங்களையும் சிரமங்களையும் காது கொடுத்துக் கேளுங்கள். அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தோள் கொடுங்கள். இந்தச் செயல்களே நம்மை அழகாகக் காட்டும்,” என்று தெரிவித்தார்.

அப்படியொரு எளிமையானவர். மகிழ்ச்சியாக இருப்பதுதான் அழகு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதை நம்புகிறவர். அதை அவர் பலமுறை நேர்காணலிலும் தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் நடந்த ‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் நடிகைகள்கூட இவ்வளவு சரளமாகப் பேசமாட்டார்கள், அந்த அளவிற்கு அவர் மேடையில் மஞ்சள் நிற உடையணிந்து கணீர் என்று தமிழில் பேசி பலரையும் அசத்தியது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை