சென்னை: ‘மரகத நாணயம்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதை அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார்.
தி இந்து போன்ற ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டு ஆதி, நிக்கி கல்ரானி, ஆனந்த்ராஜ், அருண்ராஜா காமராஜ், டேனியல், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மரகத நாயணம்’.
டில்லி பாபு இப்படத்தைத் தயாரித்திருந்தார். திபு நினன் தாமஸ் இசையமைத்திருந்த இந்தப் படத்தின் ‘நீ கவிதைகளா’ பாடல் பெரிய அளவில் வெற்றிபெற்றது. அப்பாடல் இன்றும் இன்ஸ்டகிராம் ரீல்ஸ் அங்கத்தில் பிரபலமாக இருந்து வருகிறது.
பாடல் மட்டுமல்லாமல் ‘மரகத நாணயம்’ படமும் ரசிகர்களிடையே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியை வைத்து ஏ.ஆர்.கே.சரணவன் ‘வீரன்’ படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில், அடுத்து ‘மரகத நாணயம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக இயக்குநர் சரவணன் அறிவித்துள்ளார். இதனால் முதல் பாகத்தின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தையும் டில்லி பாபுவே தயாரிக்கவுள்ளார்.