தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அப்பாவின் தடை இல்லை: துருவ்

3 mins read
b57ba0b1-b958-4327-866c-a8e3e78cfd44
துருவ் விக்ரம். - படம்: ஊடகம்

இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்ததற்கான பலன்களை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார் துருவ் விக்ரம்.

தந்தை விக்ரமுக்கு ‘சேது’ என்றால், மகன் துருவ்வுக்கு ‘பைசன்’ என்கிறார்கள்.

அதனால்தான் ஏற்கெனவே இரண்டு படங்களில் நடித்துவிட்டாலும், ‘பைசன்’ தான் தனது முதல் படம் என்கிறார் துருவ்.

மகனை வேறு துறையில் முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் விக்ரமின் ஆசையாம். ஆனால், சினிமா துறையைத் தேர்ந்தெடுத்தது துருவ்தான். மகன் தன்னை விஞ்சிவிட வேண்டும் என்பதையே தனது விருப்பமாக மாற்றிக்கொண்டுள்ளார் விக்ரம்.

“என் தேர்வுக்கு எந்த வகையிலும் அப்பா தடை போட்டதில்லை. ஆனால், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மறைமுகமான சவால்களை உருவாக்கிக்கொண்டே இருந்தார்.

“அவர் நடிக்க வந்த காலத்தில் வசதி குறைவு. வாய்ப்புகளுக்காக அலைய வேண்டியிருந்தது. ஆனால், எனக்கு எல்லாமே எளிதில் நடந்துவிட்டது. ‘உன்னால் உழைப்பைக்கூட கொடுக்க முடியாதா’ எனப் பலமுறை கேட்டிருக்கிறார். அவரது இக்கேள்வியும் மற்ற சவால்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.

“எனது ஒவ்வோர் அசைவும் அப்பாவுடன் ஒப்பிடப்படும் என்பது தெரியும். அதைத் தவிர்க்க முடியாது. ஆனால், அப்பாவின் பின்னணி உதவும் என்றாலும் தொடர்ந்து முன்னேற வேண்டும், நிலைத்திருக்க வேண்டுமானால் உழைத்துத்தான் ஆக வேண்டும்.

“வெற்றிகள் எளிதில் கிடைத்துவிடாது என்பதுதான் எதார்த்தம்,” என்று அண்மைய பேட்டி ஒன்றில், தன் மனத்தில் உள்ளவற்றைப் பகிர்ந்துகொண்டுள்ளார் துருவ்.

‘பைசன்’ படத்தின் பெரிய வெற்றி மிகுந்த மனநிறைவைத் தந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எந்த கதைக்குள்ளும் தன்னைப் பொருத்திக்கொள்ள விரும்புகிறார்.

துருவ்வுக்கு ஏராளமான ரசிகைகள் உள்ளனர் என்றாலும் தன் அம்மாதான் முதல் ரசிகை என்கிறார். அதுமட்டுமல்ல, அவரது அம்மாவுக்கு அப்பாவின் நடிப்பைவிட தன் நடிப்புதான் பிடிக்கும் என்று உறுதியாகச் சொல்கிறார்.

“அப்பாவைவிட என்னைத்தான் அம்மா அதிகம் பாராட்டியிருக்கிறார். ஆனாலும் அப்பா கோபப்பட மாட்டார். ஒரு தந்தையாக அவர் மகிழ்ச்சி அடைவார் என்றுதான் நினைக்கிறேன். யார் கண்டது? அப்பாவும்கூட என் ரசிகராக இருக்கக்கூடும்,” என்று துருவ் கூறினார்.

இவர் நடிக்கும் படத்தில் கதை, தயாரிப்பு நிறுவனம் என்று எந்த விஷயத்திலும் விக்ரம் தலையிடுவதில்லை.

‘பைசன்’ படத்துக்காகக் கடுமையாக உழைத்தபோது, விக்ரம் வருத்தப்படவே இல்லையாம். அதற்குப் பதில், மகன் மீண்டும் போராடத் தொடங்கிவிட்டதை எண்ணி மகிழ்ந்துள்ளார்.

“அப்பாவைப் போல் ஒரு படத்துக்காக மெனக்கெடுவேனா என்பது தெரியவில்லை. இந்த விஷயத்தில் அவர் இமயமலை. ஆனால், அவரது உழைப்பைப் பார்த்து உருவாகிவரும் நான், குறைந்தபட்சம் பரங்கி மலை அளவுக்காவது உழைப்பைக் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.

“அதற்கான தொடக்கம்தான் ‘பைசன்’. இயக்குநர் மாரி செல்வராஜ் இந்த விளக்கை ஏற்றி வைத்துள்ளார். அதை அணையாமல் பார்த்துக்கொள்வேன்,” என்று சொல்லும் துருவ் விக்ரமுக்கு, புகைப்படம், ஓவியக் கலைகளில் ஆர்வம் அதிகமாம்.

மேலும், இசையிலும் ‘சிங்கில்’ பாடல்களிலும் ஆர்வம் உண்டு என்றும் சில பாடல்களைத் தாமே எழுதி, பாடி வெளியிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

“இந்தப் படத்துக்காக ஒரு சிறிய ஊருக்கு என்னை அழைத்துச் சென்றார் மாரி. அங்குள்ள சிறுவர்கள்கூட வெறித்தனமாக கபடி விளையாடினார்கள். அவர்களுடன் சிலகாலம் வாழ வேண்டும் என்றார். தினமும் ஒன்றரை மணிநேரம் கபடி விளையாட்டு, பின்னர் நீச்சல், அதையடுத்து ஆடு, மாடுகளை மேய்ப்பது என்று நிறைய வேலைகளைக் கொடுத்தார் மாரி.

“ஒரு கட்டத்தில் நான் யார், எங்கே இருந்தேன், இப்போது எப்படி இருக்கிறேன் என்பதையெல்லாம் மறந்து அந்த ஊர்க்காரனாகவே மாறிவிட்டேன்.

“அந்த வாழ்க்கைக்கு நான் தயாரான பிறகே மாரி முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடிந்தது. ‘உங்களுக்கு வேண்டுமானால் இது பயிற்சியாகத் தோன்றலாம். ஆனால், எனக்கு இது வாழ்க்கையின் தொடக்கம்,” என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் விக்ரம் துருவ்.

குறிப்புச் சொற்கள்