15 ஆண்டுகளுக்கு முன்பு திரையுலகில் அறிமுகமான நடிகை அனன்யா, இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துவிட்டார்.
‘நாடோடிகள்’ படத்தின் மூலம் தன்னை அறிமுகம் செய்த இயக்குநர் சமுத்திரகனிக்கு தாம் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக அண்மைய பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
தற்போது ‘திரு.மாணிக்கம்’ என்ற புதுப் படத்தில் சமுத்திரகனியின் மனைவியாக நடித்துள்ள அனன்யாவுக்கு தமிழில் இரண்டாவது சுற்று தொடங்கியுள்ளது.
“சமுத்திரகனியை எனது ஆசான், வழிகாட்டி என்று எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள். கடவுள் ஒரு மனிதனை படைத்த பின்னர், ஒரு கட்டத்தில் இதுதான் உன் வாழ்க்கை, இதுதான் உன் பாதை என்று அடையாளம் காட்டுவாராம். அதன் பிறகு அந்தப் பாதையில் நாம் செல்ல வேண்டியிருக்கும்.
“அப்படி சமுத்திரகனி எனக்கு அடையாளம் காட்டிய பாதைதான் ‘நாடோடிகள்’. இத்தனை ஆண்டுகளில் எப்படி 60 படங்களில் நடித்து முடித்திருக்கிறேன் என்பது எனக்கும் புரியவில்லை. வியப்பு மட்டுமே மிஞ்சியுள்ளது.
“சமுத்திரகனியுடன் இணைந்து நடிப்பேன் என்று கற்பனைகூட செய்ததில்லை. ‘நாடோடிகள்’ படத்தில் நடித்த பிறகுதான் திரையுலகின் தாக்கம் எப்படிப்பட்டது என்பது எனக்குப் புரிந்தது.
“இந்தத் துறையின் மூலம் ஒருவர் எத்தகைய உயரத்தை அடைய முடியும் என்பதையும் உணர்ந்தேன்,” என்று சொல்லும் அனன்யாவுக்கு, திருமணமாகிவிட்டது என்றாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தாம் எதையும் பேச விரும்பவில்லை எனக் குறிப்பிடுபவர், ஒரு நடிகையாக தான் என்ன செய்ய வேண்டும், தனது இலக்கு என்ன என்பது குறித்து மட்டுமே அதிகம் யோசிக்கிறாராம்.
தொடர்புடைய செய்திகள்
“திரையுலகில் சாதிக்க திருமணம் ஒரு தடையல்ல. திருமணத்துக்குப் பிறகு, ‘இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்’ என நடிகைகளால் பிடிவாதமாக இருக்க முடியாது என்று ஒருதரப்பினர் கூறுகிறார்கள்.
“ஆனால் அது சரியல்ல. சினிமாவின் பார்வை மாறிவிட்டது. இந்தித் திரையுலகில் திருமணமாகி, குழந்தை பெற்ற பிறகும்கூட பல நடிகைகள் சாதித்து வருகிறார்கள்.
“ஊடகங்கள்தான் திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின் எனப் பிரித்துப் பார்க்கின்றன. திரையுலகம் அவ்வாறு பிரித்துப் பார்ப்பதில்லை,” என்கிறார் அனன்யா.
‘திரு.மாணிக்கம்’ படத்தில் இரு குழந்தைகளுக்குத் தாயாக நடித்துள்ளார் அனன்யா.
இப்படிப்பட்ட ஒரு வேடத்தில் நடிக்கத்தான் வேண்டுமா என்று பலரும் இவரைக் கேட்டுள்ளனர். ஆனால், நன்கு யோசித்துப் பார்த்த பிறகு நடிக்க ஒப்புக்கொண்டதாகச் சொல்கிறார்.
“இயக்குநர் நந்தா படத்தின் கதையை விவரித்தபோது, இதில் கதாநாயகி, வில்லி என இரண்டுமே நீங்கள்தான் என்றார். அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பதை படப்பிடிப்பு தொடங்கியதும் புரிந்துகொண்டேன்.
“எனினும், இரு குழந்தைகளுக்குத் தாயாக நடிப்பது நமக்கு சாத்தியமா எனும் யோசனையும் தயக்கமும் மனதில் இருந்தது என்பதை மறக்க முடியாது.
“எனவே, சமுத்திரகனியிடம் யோசனை கேட்டேன். அவரோ, உனக்குப் பிடித்திருந்தால் செய்யலாம். இல்லையென்றால் தயங்காமல் மறுத்துவிடலாம் என்றார்.
“அவர் இந்த வார்த்தைகளை மனதாரக் கூறியதாகத் தோன்றியது. அதன் பிறகு தயக்கமின்றி நடிக்க ஒப்புக்கொண்டேன்,” என்கிறார் அனன்யா.
இவர் தமிழில் அடுத்து ‘டீசல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகர் வினய்யின் மனைவியாக முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளாராம்.
கொடுக்கும் வேலையைச் சரியாகச் செய்தால் வாழ்க்கை சிக்கலின்றி நகரும் என்பதை உறுதியாக நம்புகிறார் அனன்யா.

