'ரிப்பப்பரி' என்ற வித்தியாசமான தலைப்பில் உருவாகியுள்ளது அருண் கார்த்திக்கின் அடுத்த படம். இதற்கு முன்பு 'சூப்பர் டூப்பர்' என்கிற அடிதடியும் நகைச்சுவையும் நிறைந்த படத்தை இயக்கியவர்.
இது சாதிச் சண்டையை மையப்படுத்தும் கதைக்களத்துடன் உருவாகும் படமாம். 'சாதிப் பெருமிதம் கொண்ட பேய்' என்பதுதான் கதைக்கரு.
"சாதிச் சண்டையில் இறந்துபோகும் ஒருவன், சாதி வெறி அடங்காமல் செய்யும் ரணகளத்தால் மூன்று இளையர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அம்மூவரும் எதிர்கொள்ளும் அனுபவங்கள்தான் படம்.
"சில படங்களின் கதையை ஒரே வரியில் சுவாரசியமாக விவரிக்க இயலும். ஆனால் அவை பார்வையாளர்களைக் கவர்வதில் கோட்டை விட்டுவிடுகின்றன.
"முழுவதும் கதைக் களத்தை நம்பி உருவாகும் படங்களில், திரைக்கதை வலிமையாக இருந்தால் மட்டும்தான் இரண்டரை மணி நேரம் திரையில் பார்க்க முடியும். உண்மையிலேயே ஒரு பேய்க்குச் சாதி வெறி பிடித்தால் என்னவாகும் என்று யோசித்தபோது, அதில் நகைச்சுவை, திகில், அடிதடி, காதல், குற்றம், இசை எனப் பல அம்சங்களை இணைக்க முடியும் என்று தோன்றியது.
"அந்த வகையில் 'ரிப்பப்பரி' படத்தை திரையில் காணும்போது அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பும் குதூகலமும் கலந்த உணர்வு ஏற்படும். அதற்கேற்ப திரைக்கதையை அமைத்துள்ளேன்.
"கிராமப் பின்னணியில் யூடியூபில் சமையல் தொடர்பான நிகழ்ச்சியைப் படைத்து வரும் மூன்று இளையர்களை அந்தப் பேய் எப்படி மோப்பம் பிடித்தது, எதற்காக மோப்பம் பிடித்தது என்பதிலிருந்தே படத்தின் சுவாரசியம் தொடங்கிவிடும்.
"இதில் வரும் பேய் கதாபாத்திரத்தைப் பார்த்தால், நமது சித்தப்பா, பெரியப்பா என்ற உணர்வு வரும். பேயைப் பார்த்து குடும்பமாகச் சிரித்துக்கொண்டே பயப்படலாம். கணினி, கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தை நம்பி சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
"சாதிய உணர்வைத் துறந்தவர்கள் அதிகரித்து வரும் காலம் இது. அவர்களைப் போன்றவர்கள், சாதியை ஒரு சட்டைபோல் அணிந்துகொண்டு ஆணவத்துடன் திரிபவர்களைப் பார்த்து 'அவன் ஒரு சாதி வெறி பிடித்த பேய்' என்று சொல்லக் கேட்டிருப்போம். அதனால் ஏற்பட்ட தாக்கம்தான் இந்தப் படம்.
"ஏதாவது ஒரு தரப்பினரைச் சாடுவது அல்லது குறை சொல்வது போன்றுதான் இன்று சாதி சார்ந்த திரைப்படங்களை எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் என் படத்தில் 'எந்தத் தரப்பையும் புண்படுத்தக் கூடாது' என்பதில் தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருந்தேன்," என்கிறார் இயக்குநர் அருண் கார்த்திக்.

