அரசியலுக்கு வரலாம், வராமலும் இருக்கலாம்: கீர்த்தி சுரேஷ்

2 mins read
c5b589c7-c81a-43e5-9fb2-16f282ce8766
சிறுமிகளுடன் முன்னோட்டக் காட்சியைப் பார்த்து ரசித்த நடிகை கீர்த்தி சுரேஷ். - படம்: ஊடகம்

இப்போதைக்கு அரசியலுக்கு வர வாய்ப்பில்லை, நடிப்புக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறேன். வருங்காலத்தில், ஒருவேளை நான் அரசியலுக்கு வரலாம்; அல்லது வராமலும் இருக்கலாம் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

ஒருசமயம், வருங்காலத்தில் நான் அரசியலில் கால்பதித்தால் முன்பு வரமாட்டேன் என்று கூறியிருந்தீர்களே என யாரும் சொல்லிக் காட்டக்கூடாது என்பதற்காகவே தான் இவ்வாறு கூறியுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

“இந்திக்கு எதிராகப் பேசிவிட்டு, இந்திப் படத்தில் நடிக்கிறீர்களே? என என்னிடம் சிலர் கேட்டனர். இந்தியை நான் எதிர்க்கவில்லை, இந்தி திணிப்புதான் கூடாது என்றேன். எனக்கு இந்தி நன்றாகப் பேசத் தெரியும்,” என்கிறார் கீர்த்தி சுரேஷ்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவர உள்ள ‘ரகு தாத்தா’ படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மதுரையில் நடந்த விளம்பர நிகழ்வில், இப்படத்தின் முன்னோட்டக் காட்சியை சிறுமிகளுடன் அமர்ந்து அவர் பார்த்து ரசித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தி சுரேஷ், மதுரை எனக்கு மிகவும் பிடித்த ஊர். அடிக்கடி நான் வந்து செல்லும் ஊர். மல்லிகைப் பூ, மீனாட்சியம்மன் கோயில் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

பெண்ணுரிமைக்காகப் போராடும் பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தி திணிப்பு பற்றி படத்தில் பேசப்பட்டிருக்கும். கலாசாரம் என்ற பெயரில் பெண்கள் என்றால் அடக்கமாக இருக்கவேண்டும், இப்படித்தான் ஆடை அணியவேண்டும் என அவர்கள்மீது பல்வேறு விஷயங்களும் திணிக்கப்படுவது குறித்து படத்தில் ஆங்காங்கே தெரியும்.

ஆனால், இவை எதுவுமே மனதை உறுத்தும் வகையில் இருக்காது. ஜாலியாகப் பொறித்த சோளத்தைச் சாப்பிட்டுக்கொண்டே குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கக்கூடிய படமாக இருக்கும்.

இயக்குநர் சுமன் குமார் வித்தியாசமாகப் படத்தை எடுத்துள்ளார். படம் முழுக்க நகைச்சுவையாக இருந்தாலும் பெண்களையும் ஆண்களையும் சிந்திக்க வைக்கும். இந்தியில் அட்லி இயக்கத்தில் முதல்முறையாக நடிக்கிறேன் எனக் கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்