தனக்குக் கிடைத்துள்ள பட வாய்ப்புகள் அனைத்துமே கடவுள் கொடுத்த வரம்தான் எனப் பூரித்துப் போகிறார் நடிகை மீனாட்சி சௌத்ரி.
“நான் நடிக்கும் எல்லா படங்களுமே ‘பான் இந்தியா’ படங்கள். இதை நினைக்கும்போது ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் மற்றொரு பக்கம் பயமாகவும் உள்ளது.
“இளம் நடிகர்கள், மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பு எனக்கு மட்டும்தான் அதிகம் கிடைத்துள்ளது,’’ என்றும் அவர் சொல்கிறார்.
தமிழில் விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தில் அறிமுகமான மீனாட்சி சௌத்ரி, தற்போது விஜய் ஜோடியாக ‘தி கோட்’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக பிரபலமாகி வருகிறார்.
தமிழக வார இதழ் ஒன்றுக்கு மீனாட்சி அளித்துள்ள பேட்டியில், “நிறைய படங்களில் ஒப்பந்தமாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
“விஜய் ஜோடியாக நடித்துள்ள ‘தி கோட்’ படம் ‘பான் இந்தியா’ படமாக செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது. துல்கர் சல்மான் ஜோடியாக நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ படமும் அதே மாதம் வெளியாகிறது.
“தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறேன். வருண் தேஜ் ஜோடியாக ‘மட்கா’ படத்திலும் நடிக்கிறேன்,” இப்படி பட்டியலை அடுக்கிக்கொண்டு செல்கிறார் மீனாட்சி.
தனது உடற்கட்டை பராமரிப்பது, அழகு ரகசியம், உணவு முறை குறித்தும் பகிர்ந்துள்ள அவர், இதெற்கெல்லாம் ராணுவத்தில் பணியாற்றிய தனது தந்தையே காரணம் என்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
“தினமும் உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவம் குறித்து எனது அப்பா வலியுறுத்திக் கொண்டே இருப்பார். அதுவே, நாளடைவில் பழகிப்போனதால், எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தினமும் உடற்பயிற்சிகள் செய்வதையோ, யோகா செய்வதையோ ஒருநாளும் தவிர்ப்பதில்லை.
“ஒவ்வொருவரும் தினமும் அரை மணி நேரமாவது கட்டாயம் உடற்பயிற்சிகள் செய்தால்தான் நோயின்றி, உடற்கட்டோடு வாழமுடியும்,” என அறிவுறுத்துகிறார் மீனாட்சி.
படப்பிடிப்பு இல்லாத சமயங்களில், காலையில் ஒரு மணி நேரம் ஓடுவது, எடை தூக்குவது, இதயப் பயிற்சி, டிரெட்மில் பயிற்சிகளைச் செய்வேன். ஓய்வு நேரங்களில் பூப்பந்து, நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளேன்.
“எங்கள் வீட்டில் எப்போதும் ஆரோக்கியமான உணவுக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும். பொரித்த உணவுகள், துரித உணவுகளுக்கு வாய்ப்பே இல்லை. பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடுவேன். இல்லையெனில் பழச்சாறு மட்டுமே அருந்துவேன்,” என்கிறார்.
ரசிகர்களுக்காக சில அறிவுரைகளும் கூறியுள்ள மீனாட்சி, “உங்களுக்காக உருவானவை உங்களை ஒருபோதும் கடந்து செல்லாது. உருவாக்கப்படாதவை நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் வந்து சேராது,” என்பவர், தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளுக்கு 200% உழைப்பைக் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் சொல்கிறார்.
அன்று ஜெய், இன்று கவின்
தமிழ் சினிமாவில் முதல் முக்கிய நடிகையாக அசைக்க முடியாத இடத்தில் இருந்துவருகிறார் நயன்தாரா. படத்தின் கதையும் பாத்திரமும் பிடித்திருந்தால் மட்டுமே நடிக்கும் பழக்கமுள்ள இவர், பெரிய நடிகர், சிறிய நடிகர் என்றெல்லாம் பாரபட்சம் பார்ப்பதில்லை.
இதுபோல்தான் அட்லி இயக்குநராக அறிமுகமாகிய ‘ராஜா ராணி’ படத்தில் ஜெய் ஜோடியாக நடிக்க பத்து ஆண்டுகளுக்கு முன்பு சம்மதித்தார். ஜெய் ஜோடியாக நயன்தாராவா எனத் திரையுலகம் அதிர்ந்தது.
அதே அதிர்ச்சி இப்போதும் ஏற்பட்டுள்ளது. இளம் நாயகன் கவினுடன் நயன்தாரா ஜோடி சேரவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்ததை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விஷ்ணு எடவன் இயக்கும் புதுப்படத்தில், தன்னைவிட வயது அதிகமான நயன்தாராவை கவின் காதலிப்பதுதான் கதை என கோலிவுட் வட்டாரத்தில் காற்றுவாக்கில் செய்தி அடிபட்டு வருகிறது.