தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் கார்த்தி, அடுத்தடுத்த பிரம்மாண்டப் படங்களின் மூலம் தமது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
‘சர்தார் 2’, ‘கைதி 2’, ‘மார்ஷல்’ என மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் படுவேகத்துடன் நடித்துவரும் அவர், இப்போது தெலுங்கில் ‘மேட்’ எனும் வெற்றிப் படத்தை இயக்கிய கல்யாண் சங்கரின் புதுப்படம் ஒன்றில் இணைந்துள்ளார்.
நகைச்சுவை, குடும்பப் பின்னணியுடன் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் எளிய பூசையுடன் இனிதே தொடங்கியது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு கார்த்தி நேரடியாகத் தெலுங்கில் நடிக்கும் முழுமையான நகைச்சுவைத் திரைப்படம் இது என்பதால் ஆந்திரா, தெலுங்கானா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படத்தில் கார்த்தியின் ஜோடியாக தென்னிந்தியாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகை மீனாட்சி சௌத்ரி ஒப்பந்தமாகியுள்ளார்.
விஜய், மகேஷ் பாபு போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் நடித்த மீனாட்சி, தற்போது முதன்முறையாக கார்த்தியுடன் இணைந்துள்ளார்.
மேலும், இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் நடிக்கிறார்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஒருபுறம் 1960களின் பின்னணியில் உருவாகும் ‘மார்ஷல்’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், கல்யாண் சங்கருடனான இந்தக் கூட்டணி கார்த்தியின் திரைப்பயணத்தில் மற்றொரு வெற்றிப் படமாக அமையும் எனத் திரையுலகினர் எதிர்பார்க்கின்றனர்.
புதிய கூட்டணி, நகைச்சுவை ததும்பும் கதை என இப்படம் குறித்த புதுத் தகவல்கள் சமூக ஊடகங்களில் தற்போது பரவி வருகின்றன.
அடிப்படையில் ஒரு பல் மருத்துவரான மீனாட்சி சவுத்ரி அளித்துள்ள நேர்காணலில், “விஜய்யுடன் ‘தி கோட்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
“நான் தற்செயலாகத்தான் ‘மிஸ் இந்தியா’ போட்டிக்குச் சென்றேன். மருத்துவம், நடிப்பு என இரண்டையுமே நான் சமமாக நேசிக்கிறேன். என் பெயருக்குப் பின்னால் ‘டாக்டர்’ என்ற பட்டம் இருப்பது எனக்குப் பெருமை. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் மருத்துவ நூல்களைப் படிப்பதை என் பொழுதுபோக்காகக் கொண்டுள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
கார்த்தியுடன் புதிய படத்தில் இணைந்தது பற்றி அவர் கூறுகையில், “கார்த்தி சார் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி, ஒரு நல்ல மனிதர். அவரது படங்களின் தீவிர ரசிகை நான். அவருடன் ஒரு முழுமையான நகைச்சுவைப் படத்தில் நடிப்பது சவாலாகவும் சுவாரசியமானதாகவும் இருக்கும்,” எனத் தமது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பதால் இரு மொழிகளையும் விரைவாகக் கற்று வருவதாகவும் எதிர்காலத்தில் தனக்குத் தானே ‘பின்னணி’ பேச ஆசைப்படுவதாகவும் அவர் பல பேட்டிகளில் குறிப்பிட்டு வருகிறார்.
மீனாட்சி சௌத்ரி தற்போது ஓர் அதிர்ஷ்டச் சின்னமாகப் பார்க்கப்படுகிறார். ஏனெனில் அவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் பெரிய வரவுசெலவில் உருவாவதோடு, முன்னணி நாயகர்களின் படங்களாகவும் இருக்கின்றன.

