எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என்னுடைய நட்பு வட்டாரத்தைச் சந்தித்துப் பேசிவிடுவேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
மேலும், அவர்களைச் சந்தித்து அவர்களுடன் நேரம் செலவிடுவது தமக்குப் புத்துணர்வை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், 1975-1979ஆம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. அதில், முன்னாள் மாணவர்களை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் பேசிய காணொளி ஒளிபரப்பப்பட்டது.
“கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்து நீங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்திருக்கிறீர்கள். பழைய நண்பர்களைப் பார்க்கும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது,” என அதில் அவர் கூறினார்.
தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு, முன்னாள் காவல்துறை உயரதிகாரி சைலேந்திரபாபு ஆகியோர் அப்பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்தான் எனத் தெரிவித்த அவர், தன்னுடைய சம்பந்தியும் தொழிலதிபருமான வணங்காமுடியும் அங்கு படித்தவர்தான் என்றார்.
“நமக்கு உறவினர்கள் நிறைய பேர் இருந்தாலும் நண்பர்களைப் பாா்க்கும்போது புத்துணர்ச்சி ஏற்படும். நண்பர்களுடன் செலவிடும் நேரம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எனக்கு எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை பெங்களூரு சென்று என்னுடன் ஓட்டுநர், நடத்துனராகப் பணியாற்றிய நண்பா்களைச் சந்திப்பேன்,” என அவர் சொன்னார்.
“சிவாஜி என்ற எனது பெயரை நானே மறந்துவிட்டாலும் அவர்கள் அந்தப் பெயரைச் சொல்லி அழைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்வேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்த உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என அந்தக் காணொளியை நிறைவுசெய்தார் ரஜினி.

