கடின உழைப்பு, விடாமுயற்சியால் ‘மகாராஜா’க்களாக உயர்ந்தவர்கள்

3 mins read
‘மகாராஜா’ திரைப்படத்துக்கு உலகளாவிய வெற்றியைத் தேடித் தந்த நித்திலன், பி.எல்.தேனப்பன், ‘கல்கி’ ராஜா சிறப்பு நேர்காணல்
04e02978-5ac0-4418-a67f-92c03d2b21a8
இன்னிசை சாரல் நிகழ்ச்சியில் ‘மகாராஜா’ குழுவினரான நித்திலன் சுவாமிநாதன், பி.எல்.தேனப்பன், ‘கல்கி’ ராஜா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. படத்தில் பனானா லீஃப் அப்போலோ உரிமையாளர் திரு சங்கரநாதன் (இடக்கோடி), 8 பாய்ண்ட் எண்டர்டெயின்மண்ட் நிறுவனத்தின் திரு அருமைச்சந்திரன் (வலக்கோடி). - படம்: வாங்கோ ஸ்டூடியோஸ்

சிங்கப்பூரில் ஜனவரி 28ஆம் தேதி நடந்த ‘இன்னிசைச் சாரல்’ தேவா இசை நிகழ்ச்சியில் ‘மகாராஜா’ இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், தயாரிப்பாளரும் நடிகருமான பி.எல்.தேனப்பன், நடிகர் ‘கல்கி’ ராஜா ஆகியோருக்கு ‘மகாராஜா’ திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடி விருது வழங்கப்பட்டது.

‘மகாராஜா’ இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், தயாரிப்பாளரும் நடிகருமான பி எல் தேனப்பன், நடிகர் ‘கல்கி’ ராஜா ஆகியோருக்கு வழங்கப்பட்ட விருது.
‘மகாராஜா’ இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், தயாரிப்பாளரும் நடிகருமான பி எல் தேனப்பன், நடிகர் ‘கல்கி’ ராஜா ஆகியோருக்கு வழங்கப்பட்ட விருது. - படம்: சி சங்கரநாதன்

மூவரும் தம் திரையுலகப் பயணங்களையும் திரைத்துறையில் சாதிக்க விரும்பும் சிங்கப்பூர்வாசிகளுக்குத் தம் ஆலோசனைகளையும் தம் எதிர்கால இலட்சியங்களையும் தமிழ் முரசிடம் பகிர்ந்தனர்.

இயக்குநர் நித்திலனின் இரண்டு திரைப்படங்களிலும் நடித்துள்ளனர் பி.எல்.தேனப்பன், நடிகர் ‘கல்கி ராஜா’. திரையில் வெளிப்படும் அவர்களது இணைபிரியா நட்பு, நேரிலும் அவர்களுடைய கலகலப்பான பேச்சிலும் நகைச்சுவையிலும் வெளிப்பட்டது.

“நாங்கள் இருவரும் முதன்முறையாக சிங்கப்பூரில் காலடி எடுத்துவைத்துள்ளோம். அண்ணன் தேனப்பன் அடிக்கடி சிங்கப்பூருக்கு வந்துசெல்வார்.

“சிங்கப்பூரில் விதவிதமாக உணவு கிடைக்கிறது. அதைவிட முக்கியமாக, மக்கள் எங்களை மிகவும் அன்பாக வரவேற்கிறார்கள்,” எனப் பாராட்டினர் நித்திலனும் ‘கல்கி’ ராஜாவும். இந்தியாவைவிட்டுத் தான் வந்துள்ள முதல் நாடு சிங்கப்பூர் என்றார் ‘கல்கி’ ராஜா.

“சீனாவில் மகாராஜா வெற்றிநடை போடுகிறது. அதனால் சீனப் புத்தாண்டு சமயத்தில் நாங்கள் வந்துள்ளது ஒரு சிறப்பு,” என்று நித்திலன் கூறினார்.

மூவரின் வாழ்க்கைக் கதைகளும், சிங்கப்பூர்வாசிகளுக்கு வெவ்வேறு விதங்களில் முன்மாதிரிகளாக அமைகின்றன.

குறும்பட இயக்குநராகத் தொடங்கிய நித்திலன், ‘நாளைய இயக்குநர்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூன்றாம் பருவத்தில் வெற்றியாளரான பின், திரைப்பட இயக்கத்தில் முழு மூச்சாக இறங்கினார்.

அவரது முதல் படமான ‘குரங்கு பொம்மை’ 2017ல் வெளியானது. திரைக்கதைக்கும் இயக்கத்துக்கும் அது நல்ல விமர்சனங்களை அப்படம் பெற்றது. 2024ல் வெளிவந்த ‘மகாராஜா’ பல வெற்றிகளையும் குவித்தது. நெட்பிலிக்சிலும் சீனாவின் திரைகளிலும்கூட அது வெற்றிநடை போடுவது அதன் திரைக்கதையின் வலிமையைப் பறைசாற்றுகிறது.

சிறுவயதில் மிகக் கடினமான சூழல்களைக் கடந்து வந்தவர் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன். கண்ணியத்தின் மூலம் நல்ல பெயரெடுத்து, தயாரிப்பாளராக முன்னேறி, இன்று நடிகராகவும் சாதித்து வருகிறார்.

நடிகர் ‘கல்கி’ ராஜா, நடிக்க வாய்ப்புக் கிடைக்காததால் இயக்கத்தில் கவனத்தைத் திருப்பினார். ‘குரங்கு பொம்மை’ திரைப்படத்தின் உதவி இயக்குநரும் அவரே. நித்திலன் ‘குரங்கு பொம்மை’யில் எழுதிய கதாபாத்திரத்துக்கு அவரே பொருத்தமானவர் எனக் கருதியதால், அவருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.

சிங்கப்பூரில் அனைவரும் அன்பானவர்கள். நான் வெளிநாடே வந்ததில்லை. நான் கடல்தாண்டி வந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் சிங்கப்பூரே. பலரும் சீனப் புத்தாண்டுக்கு எங்களை வாழ்த்தவும் செய்தார்கள்.
‘கல்கி’ ராஜா

‘மகாராஜா’ உருவான கதை

“குரங்கு பொம்மை’க்கு முன்பே, நான் ‘நாளைய இயக்குநர்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற காலத்தில் எனக்கு ‘மகாராஜா’வுக்கான யோசனை தோன்றியது. அதன் திரைக்கதையை எழுதியிருந்தேன். ஆனால், அதைப் பிறரிடம் எடுத்துக்கூறியபோது அச்சமயத்தில் அது திரைப்படமாவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு என உணர்ந்தேன். அதனால், வேறொரு கதையை எழுத ஆரம்பித்தேன். அதுதான் குரங்கு பொம்மை,” என்றார் நித்திலன்.

திரைப்படங்களின் அடிப்படை

“’அஞ்சாதே’ படத்தில் ஒரு சிறிய காட்சியைப் பார்த்துத்தான் எனக்கு குரங்கு பொம்மைக்கான யோசனை தோன்றியது. மகாராஜா திரைப்படத்துக்கான யோசனை, பத்திரிகையில் நான் படித்த இரண்டு உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தோன்றியது. அவை இரண்டையும் இணைத்து, கதையை வளர்த்தேன்,” என்றும் நித்திலன் கூறினார்.

“இதுவரை நான் ஒருநாள்கூட ஏன் இந்த வேலைக்கு வந்தோம் என நினைத்ததில்லை. க‌ஷ்டப்படும்போதும் சரி, நன்றாக இருக்கும்போதும் சரி, அந்த உணர்வு எனக்கு வந்ததே இல்லை,” என்றார் நித்திலன்.

“எனக்கு நித்திலன் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. குரங்குப் பொம்மையில் நடிக்கும்போதே அது தெரிந்தது. அப்போதே சக தயாரிப்பாளர்களைத் தொலைபேசியில் அழைத்து ‘இவர் பெரிய இயக்குநராவார்’ எனக் கூறினேன்,” என்றார் தேனப்பன்.

‘கல்கி ராஜா’வுக்கு நகைச்சுவை உணர்வு இருந்ததால்தான் ‘மகாராஜா’ படத்தின் நகைச்சுவை மக்களைச் சென்றடைந்தது என்றும் கூறினார் நித்திலன்.

மக்களுக்குச் சொல்ல விரும்புவது

“வாழ்க்கையில் முன்னுக்கு வருவோர் அனைவருமே அடிமட்டத்திலிருந்து க‌ஷ்டப்பட்டு வந்தவர்களாக இருப்பார்கள். நான் ஆறாவது படிக்கும்போதே மாலை நான்கு மணியிலிருந்து இரவு 11 மணி வரை ஒயின்‌‌‌ஷாப்பில் பாத்திரம் கழுவி, மேசைகளைச் சுத்தம் செய்வேன். வீட்டிற்கு ஒரே பையன். சில ஆண்டுகளுக்குப் பின் வீடு வீடாக வீடியோ காசெட் விநியோகமும் செய்தேன்.

“செய்யும் தொழிலுக்கும் சம்பளம் தரும் முதலாளிக்கும் உண்மையாக வேலைபார்த்தால், நாளையே நாம் முதலாளியாக முன்னேறலாம்,” என்றார் தேனப்பன்.

“படத்தின் வெற்றிக்கு அதன் தரம்தான் முக்கியம். சிறிய நாடுகளின் படங்களும் உலகளவில் பேசப்படுகின்றன. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். அறிவை வளர்த்து, பற்றோடு செயல்பட்டால் முன்னுக்கு வரலாம்,” என்றார் நித்திலன்.

நடிகர் ‘கல்கி’ ராஜா, ‘மகாராஜா’ இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், தயாரிப்பாளரும் நடிகருமான பி எல் தேனப்பன். (இடமிருந்து).
நடிகர் ‘கல்கி’ ராஜா, ‘மகாராஜா’ இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், தயாரிப்பாளரும் நடிகருமான பி எல் தேனப்பன். (இடமிருந்து). - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்